புதன், நவம்பர் 24, 2010

மறுபடியும் எந்திரன்

எந்திரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயா பிக்சர்ஸ் நிறுவனமான கிரீன் லிட்டில் மூவீஸ் எந்திரன் - 2 என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
எந்திரன் படத்தின் கடைசிக் காட்சி நினைவு இருக்கும்... மியூசியத்தில் எந்திரன் அக்கு வேறு ஆணி வேறாக இருக்கும்.. இரண்டாம் பாகம் அதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.
அந்த மியூசியத்துக்கு தாடி வைத்துக்கொண்டு ஒரு பெரியவர் வருகிறார், அவருக்கு உதவியாளராக இன்னொருவர். பார்க்க அறிஞர் மாதிரி இருக்கிறார். இவர்கள் இருவரும் சும்மா இல்லாமல் கூட்டம் இல்லாத மியூசியத்தில் எந்திரனை திரும்பவும் சேர்க்கிறார்கள். எந்திரன் உயிர்பெற்று விடுகிறது.
ஆண்டு - கிபி 2023
உயிர் பெற்ற எந்திரன் பேசத் தொடங்குகிறது "13 ஆண்டுகள் என்னை ஒதுக்கிவிட்டீர்கள். இந்த தண்டனை எனக்கு போதாதா? நான் என்ன செய்தேன்? பாயசம் சாப்பிடும் போது புறங்கையைத்தானே நக்கினேன்...."
பெரியவருக்கும் அறிஞருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். இந்த எந்திரனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, ஒரு ஐந்து எழுத்து பெயர் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் ஐந்து எழுத்தில் பெயர் வைத்தால் தமிழக மக்கள் குழம்புவார்கள் அதனால் நான்கு எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். எந்திரனிடம் பேச்சுக் கொடுக்கிறார்கள்.
"உனக்கு என்ன எல்லாம் தெரியும்?"
"எனக்குக் கவிதை எழுதத் தெரியும்"
"அட அப்படியா? ஒரு கவிதை சொல்லு பார்க்கலாம்"
"தமிழர்களேதமிழர்களேநிங்கள் என்னைநட்டு போல்டாக கழட்டி போட்டாலும்பேரிச்சம் பழமாக தான் ஆவேன்அதை என் குடும்பத்தினர் எல்லோரும் சாப்பிடலாம்."
பெரியவரும், அறிஞரும் இது எப்படிக் கவிதையாகும் என்று குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.
"வேற என்ன தெரியும்?"
"கடிதம் எழுதுவேன்"
அப்பறம்?
"சினிமா படத்துக்கு வசனம் எழுதுவேன்"
"ம்"
"ஏதாவது மானும் மயிலும் ஆடும் நிகழ்ச்சிக்கு அழைத்துக்கொண்டு போனால் நான்குமணி நேரம் ஆனாலும்கூட சோர்ந்துபோகாமல் நடனத்தை மட்டுமே பார்ப்பேன்.
"ஓ! இன்னொரு கேள்வி..."
"நீங்கள் கேள்வியே கேட்க வேண்டாம், நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லுவேன்!"
இதற்குமேல் பெரியவரும் அறிஞரும் வாயடைத்து, "உனக்கு பல கலைகள் தெரிந்திருக்கிறது. அதனால் உன்னை "கலைஞர்" என்று அழைக்க போகிறோம்," என்று சொல்ல எந்திரன் குஷியாகிறது.
"உங்களை நான் எப்படி அழைக்க வேண்டும்?" என்று எந்திரன் கேட்டது.
"நீயே முடிவு செய்" என்றார் பெரியவர்.
"எனக்கு நீங்கள்தான் திரும்பவும் உயிர் கொடுத்தீர்கள். அதனால் நீங்கள்தான் என் கடவுள்!"
பெரியவர் கோபமாக, "ஏய் காட்டுமிராண்டி! நானே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீ என்னையே கடவுள் என்று சொல்லுகிறாய். என்ன தைரியம் உனக்கு? ..." என்று கத்த தொடங்கினார்.
கலைஞர் உடனே தன் டேட்டாபேஸில் அலச, கடவுள் என்றால் மற்றொரு வார்த்தை -தெய்வம்... அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. என்று ப்ளாஷ் அடிக்கிறது. பிதா என்றால் தந்தை என்றும் ஒளிர்கிறது.
"நீங்கள் என் தந்தை மாதிரி, பெரியவராகவும் இருப்பதால் நீங்க "தந்தை பெரியார்" என்று அழைக்கிறது.
பக்கத்தில் இருக்கும் அறிஞர், "அவர் எனக்குதான் முதலிலிருந்தே தந்தை," என்று சண்டைக்கு வருகிறார்.
"அப்படியென்றால் நீங்கள் எனக்கு மூத்தவர். அதனால் உங்களை அறிஞர் அண்ணா என்று கூப்பிட போகிறேன்."
கலைஞர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் - மூவரும் எலக்டரிக் டிரெயினில் ஏறுகிறார்கள்.
இவர்கள் ஏறிய பெட்டியில் ஓர் இளைஞர் குமுதம் படித்துக்கொண்டு இருக்கிறார். அதன் அட்டையில் எந்திரன் படம் இருப்பதை பார்த்து எந்திரன் குஷியாகிறது. அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரு நொடி கண்ணுக்குநேராகப் பிடித்துவிட்டு திருப்பித் தருகிறது.
புத்தகம் கொடுத்தவர், "அதற்குள் படித்துவிட்டீர்களா?"
"படிப்பதற்கு என்ன இருக்கிறது? குமுதத்தில் வெறும் படம்தானே. அதனால் உடனே பார்த்துவிட்டேன்" என்கிறது.
பக்கத்தில் ஒரு கணக்கு வாத்தியார் கால்குலேட்டரை வைத்து ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறார். எந்திரன் என்ன என்று கேட்க, அவர் 1.7லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியவில்லை என்று சொல்ல எந்திரன் டக் என்று விடை சொல்லுகிறது. இதில் எத்தனை கிலோ ஒரு ரூபாய் அரிசி வாங்கலாம், எத்தனை கிராம் மளிகைப்பொருள்கள் வாங்கலாம் என்றெல்லாம் விஜய்காந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்லுவதை பார்த்து எதிர்சீட்டில் இருக்கும் இளைஞர் ஆர்வமாகக் கிட்டே வருகிறார்.
அப்போது அந்த இளைஞரைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ். கோஷ்டி ஒன்று வம்பு செய்ய உடனே எந்திரன் அவர்களை வாய்க்கு வந்தபடி தூவேஷிக்கிறது. அந்த கோஷ்டி அடுத்த ஸ்டேஷனில் இறங்கிப் போய்விடுகிறார்கள்.
"உன் பெயர் என்ன?" என்று எந்திரன் கேட்கிறது.
அதற்கு அந்த இளைஞர், "எனக்கு வேலை எதுவும் இல்லை, சும்மா ஊர்சுற்றுகிறேன். அரேபிய மொழியில் ராகுல் என்றால் ஊர்சுற்றுபவர் என்று பெயர். அதனால் என்னை எல்லோரும் ராகுல் என்று அழைப்பார்கள். பணம், பதவி என்று நிறைய இருந்தாலும், ஒரு ஜாலிக்கு ரயிலில் சுற்றுவேன், பிட்டுக்கு மண் சுமப்பேன்..குடிசையில் டீ குடிப்பேன்." என்று அடுக்கிக்கொண்டே போகிறார். "என்னை அந்தக் கும்பலிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றி. பதிலுக்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?" என்றும் விசாரிக்கிறார்.
எந்திரன் சற்றும் யோசிக்காமல், "என்னிடம் 2G ஃபோன் தான் இருக்கிறது. எனக்கு இப்போது லேடஸ்டாக 3G ஃபோன் வேண்டும்," என்று கேட்கிறது.
உஷாரான இளைஞர், "என் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுகிறேன்" என்று கூறி அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்பதற்கு முன்பாகவே இறங்கி தலைதெறிக்க ஓடுகிறார்.
எந்திரனுக்கு உலக அறிவு, ஞானம் எல்லாவற்றையும் பகுத்தறியச் சொல்லிதர முடிவுசெய்து பெரியவரும் அறிஞரும் அறிவாலயத்துக்கு அப்டேட் செய்ய அழைத்து போகிறார்கள். அங்கே சந்தானம், கருணாஸ் போல மணிமணியாய் இரண்டு 'வீர' இளைஞர்கள் அவருக்கு ஸ்பீச் பிராக்டிஸ் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பயிற்சி எப்படி இருக்கிறது, "தமிழ் காட்டுமிராண்டி பாஷை, கடவுளை நம்பாதே, பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானைக் கொல்லு" என்றெல்லாம் சரியாகச் சொல்கிறதா என்று சோதிக்க வந்த பெரியவரைப் பார்த்து எந்திரன், "தமிழன் மரமண்டை, சோற்றாலடித்த பிண்டம்..." என்று அடுக்குகிறது. பெரியவரும், அறிஞரும் காமெடி உருப்படிகளைக் கண்டிக்கிறார்கள். காமெடி உருப்படிகள் எந்திரனோடு சேர்வதா சேற்றைவாரி அடிப்பதா என்ற குழப்பத்திலேயே மீதி நாள்களைக் கழிக்கிறார்கள் வில்லனாக வரும் கேரக்டர் பெரியவரிடம் இருக்கும் கருப்பு பெட்டியில் இருக்கும் சிகப்பு டிஸ்கை எடுத்து எந்திரனுள் போட, கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு கரகரத்த குரல் என்று எந்திரன் அடுத்த வெர்ஷன், புதிய கெட்டப்புடன் எழுந்து வருகிறது.
இதற்குள் அறிஞர் வேறு ஒரு ரோபோவை தயாரிக்க அதுவும் கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பி கெட்டபுடன் வருகிறது...
இதற்கு பிறகு படம் குடும்ப படமாகிறது. அதாவது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

கருத்துகள் இல்லை: