வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டே வருக!!!

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
கடந்த வருடம் நடந்தவை நடந்து முடிந்தவை;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என நினைப்போம்;
கடந்தகால தவறுகளை படிப்பினையாகக் கொள்வோம்;
நிகழ்கால செயல்களை முறைப் படுத்துவோம்;
நல்லவைகளையே நினைப்போம்;
அல்லாதவைகளை விலக்குவோம்;
சலனங்களையும், சஞ்சலங்களையும் தூக்கிப் போடுவோம்;
உறுதிகொண்ட நெஞ்சினராய் உலாவுவோம்;
பகுத்தறியும் அறிவினைப் பெறுவோம்;
நல்லதொறு இலக்கினை நோக்கிப் பயணிப்போம்;
வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்;
அன்பும், அறிவும், பாசமும், நேசமும், பண்பும், பணிவும், கருணையும் உடைய ஒரு மனிதனாய் வாழ உறுதி கொள்வோம்.

வெள்ளி, டிசம்பர் 17, 2010

புஸ் புஸ் பூரி

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு.
வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.
செய்முறை:==
கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து ,உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.*
நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும்.* பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய்(ஒரு டேபிள்ஸ்பூன்) படுமாறு தடவவும்.*
ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும்.*
எண்ணையை கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.*
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.(மாவு சமமாக இருக்க வேண்டும்)*
எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.*
ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்.
இரு பக்கங்களும் சிவந்ததும் பேப்பர் டவலில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.
இந்த முறையில் செய்த பூரி சீக்கிரம் அமுங்காது.

மிளகு உளுந்து வடை

தேவையானப்பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம்---------பொடியாக நறுக்கியது 1/4 கப்
சீரகம் - ------------1 ts ---- 2 ts
மிளகு -------------- 1 ts-- 2 ts
இஞ்சி -------------- ஒரு சிறு துண்டு
உப்பு --------------- தேவைக்கு ஏற்ப
எண்ணை --------- பொறித்து எடுக்க
செய்முறை-
உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு மற்றும் இஞ்சியை சேர்த்து மைய அரைக்கவும்.
அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும்.
சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும்.
அதுதான் சரியான பதம்.
அரைத்த மாவில், பொடியான நறுக்கிய வெங்காயம், கொரகொரப்பாக பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான் சூட்டில் வைத்து, ஒரு எலுமிச்சம் பழ அள்வு மாவை எடுத்து, இலேசாக தட்டி, நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.
மேற்கண்ட அளவிற்கு சுமார் 12 வடைகள் கிடைக்கும்.

இட்லி- சாம்பார்

தேவையானப்பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/2 கப்
பயத்தம்பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் -------- 1/4 ts
சாம்பார்ப் பொடி - 2 ts- 3 ts
சின்ன வெங்காயம் - 10 முதல் 15 [முழுதாகவோ, பாதியாவோ போடலாம்]
பெரிய தக்காளி -------- 1
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லித்தழை - கொஞ்சம்
புளி---------------------- ஒரு நெல்லிக்காய் அளவு
புளியைக் கரைத்து அரை டம்ளர் புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.
எண்ணை ----------------- 1 tbs
கடுகு ---------------------- 1 ts
பெருங்காயத்தூள் -------- 1/4 ts

செய்முறை:
துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.புளியை ஊறவைத்து, கரைத்து 1/2 கப் வரும் அளவிற்கு, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.சாம்பார் வெங்காயத்தை, தோலுரித்து, நீளவாக்கில் ஒன்றிரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு அத்துடன் புளித்தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி கொதிக்க விடவும். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக்கொதித்தவுடன், வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, கீழே இறக்கி வைத்து கொத்துமல்லித் தழையைத்தூவவும்.
குறிப்பு: எண்ணையில் வறுத்து அரைத்த வீட்டில் தயாரித்த சாம்பார்ப் பொடியை உபயோகித்தால், சாம்பார் வாசனையாக இருக்கும்.
இதில், ஒரு உருளைக்கிழங்கு, ஒரு காரட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் வதக்கும் பொழுது அத்துடன் சேர்த்து வதக்கி சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம்.

வியாழன், டிசம்பர் 16, 2010

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில்


மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர்.
வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு. எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.
11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடையது.
இது இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழைமையான வடபத்ரசாயி கோயில். மேற்கில் ஆண்டாள் திருக்கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
ஆண்டாளின் திருக்கோயில் முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியன சிற்ப வேலைப்பாடு மிகுந்தவை.
ஒரே கல்லாலான பெரிய தூண் துவஜஸ்தம்பம் சிறப்பானது.
உட் பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது மாதவிப் பந்தல். அடுத்து மணி மண்டபம். இங்கு கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத் தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர்.மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஆண்டாள்& ரங்க மன்னார், கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கோபால மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர்.ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர்& ரங்கமன்னார், ராஜ மன்னார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை& மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.
தண்ணீர் பஞ்ச காலத்திலும்கூட இந்தத் திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் நீர் வற்றுவது இல்லை. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறியவும் முடியவில்லை.
கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள். அதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.
ஆண்டாள் சூடிய மாலைக்குத் தனி மகத்து வமே இருக்கிறது. வேங்கடாசலபதியே இந்த மாலையை ஆசையுடன் அணிகிறாரே! வேங்கடேசன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள், அவரைத் துதித்து நாச்சியார் திருமொழியில் பாடினாள். இதனால் மகிழ்ந்த வேங்கடேசன், ஆண்டாள் அணிந்த மாலையை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் என்கிறது புராணம். ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.
தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.
ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
இங்கு ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு- மாதுளம் பூ; மரவல்லி இலை- கிளியின் உடல்; இறக்கைகள்- நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன். இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.
திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.
சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர். சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.
மார்கழி மற்றும் எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.
உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகை:[மேலே உள்ள படம்]
உங்களது நீண்டகாலப்பிரச்னைகள் தீர ஒரு சுலபப் பரிகாரம்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று ஆண்டாளுக்கு அர்ச்சனை செய்யவும்.(நம் பெயரில்தான்).பின்னர் கண்ணாடி மாளிகைக்குள் கைகூப்பிய வண்ணம் உங்களது ரூபத்தைப் பார்த்தபடி 16 சுற்று சுற்றுங்கள்.பின்னர்,அதைவிட்டு வெளியே வந்து ஒரு மாட்டிற்கு(கோவில் அருகே அல்லது நமது தெருவில்/ஊரில்)6 பழங்கள் வாங்கிக் கொடுங்கள்.இப்படி சௌகரியப்பட்ட நாட்களில் 9 நாட்கள் தொடர்ந்து அல்லது விட்டு விட்டோ செய்ய வேண்டும்.அடுத்த சில வாரங்களில் எல்லாப்பிரச்னைகளும் தீர்ந்துவிடுகின்றன.சிலருக்கு ஒரே தடவையிலும்,சிலருக்கு 9 தடவைக்குள்ளும்,சிலருக்கு 9 தடவை இப்படி செய்து முடித்தப்பின்னரும் பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.இதற்கு எந்த வித நாள்,நட்சத்திரமும் பார்க்க வேண்டாம்.
ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ&தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். பெரிய தேர், ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக்கால் பங்கு உயரம் உள்ளது
ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டின்போது கட்டியம் கூறும் உரிமையை நிரந்தரமாகப் பெற்றுள்ளவர்களை ‘வேத பிரான் பட்டர்’ என்கிறார்கள். பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தவர்கள் இவர்கள்.ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் விசேஷம் அரவணைப் பிரசாதம். பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் வடை, தேன்குழல் (முறுக்கு) அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன.
பங்குனி திருக்கல்யாணத் தின்போது, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி கோயிலிலிருந்து பரிவட்டமும் (பட்டு), ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு, மதுரை அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலிருந்து பட்டுப் புடவையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.
பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்மகர்த்தாவாகப் போற்றப் படுகிறார். அவர் தர்மகர்த்தாவாக இருந்தபோது,ஸ்ரீஆண்டாளிடம்வரவுசெலவை ஒப்புவிப்பாராம்! இந்த நிகழ்ச்சி, வருடம்தோறும் ஆடி மாதம் 7வது நாளில் ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ‘நெல் அளக்கும்’ வைபவமாக நடைபெறுகிறது.
தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம் .
நன்றி bsubra.wordpress.com/

சூடிக் கொடுத்த கோதை

அது திரேதா யுகம். மிதிலை நகரை சிறப்புற ஆண்டு வந்தான் ஜனக மகாராஜன். கர்மத்தாலேயே சித்தியடைந்தவன் என்று ஜனக மன்னனைச் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட ஜனக மன்னன், யாகசாலை ஒன்று அமைப்பதற்காக கலப்பை கொண்டு பூமியை உழுதான். யாகசாலைக்காக நிலமகளைக் கீறி வந்த அப்போது, அந்தக் கலப்பையின் படைச் சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமாக ஒரு மகள் தோன்றினாள். அவளை ஜனகன் தன் மகளாகப் பாவித்து, சீதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். மணப் பருவம் எய்திய அம்மகளை அயோத்தி மன்னன் தசரதனின் குமாரனாக அவதாரம் செய்த திருமகள்நாதன் ராமபிரான் மணந்து கொண்டான். மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தான். ஸ்ரீதேவி புவியில் தோன்றி, புவியிலுள்ள மறச் செய்திகள் மறையவும், அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேண்டியே, திருமாலின் அவதாரமாகிய ராமனுக்குத் துணைவியானாள்.
அதேபோல் இது கலி யுகம். தென்பாண்டி நாட்டைச் சேர்ந்த வில்லிபுத்தூரில் சிறப்புறத் திகழ்ந்துவந்தார் பட்டர்பிரான். அவருக்கு பெரியாழ்வார் என்றும் பெயருண்டு. பக்தியாலே சித்தியடைந்தவர் என்ற சிறப்பு அவருக்கு உண்டு. அவர் அங்கே கோயில் கொண்டிலங்கும் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலையும் பாமாலையும் ஒருங்கே சமர்ப்பித்து பக்தி யாகம் செய்து வருபவர். அவருடைய வேள்விச் சாலை, அவர் அமைத்திருந்த நந்தவனம்தான். அந்த நந்தவனத்தில் ஒரு நாள் அவர் துளசி தளங்களைப் பறித்தவாறே வருகையில், அதன் அடியில் ஒரு குழந்தை மலர்ந்து சிரிப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து தன் மகள் போலே வளர்த்து வந்தார். கோதை என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. பூமாதேவியே இவ்வுலக மக்களை நன்னெறிப்படுத்துவதற்காக சீதையைப் போலே மீண்டும் கோதையாக அவதரித்தாள். அவளுடைய அந்தரங்க பக்தியெல்லாம் அந்த அரங்கன் மேலேயே இருந்தது.
இப்படி ஆண்டாள் பிறந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டது, ஆடிப் பூர நன்னாள். இதனாலேயே அந்த ஆடிப்பூரம் மிகுந்த சிறப்பும் சீர்மையும் பெற்றது. இதை மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் இப்படிச் சொல்கிறார்....
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.
- என்றும்,
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.
- என்றும் பாடிப் போற்றுகிறார்.
இப்படி அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாக அவதரித்த ஆண்டாள், சிறுவயது முதலே, தம் தந்தையாரான பெரியாழ்வாரிடம் இருந்து பக்திச் சிறப்பையும் கவிச் சிறப்பையும் கற்று வளர்ந்தார். அதிலே கிருஷ்ணனைப் பற்றியும், அவனுடைய லீலைகளைப் பற்றியும் அவர் சொல்லும் கதைகள் அவளுடைய உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. அதில் கிருஷ்ணனின் பால லீலைகள் அவளுடைய மனத்தைக் கவர்ந்தன. எந்நேரமும் குழந்தை கிருஷ்ணன் தன்னிடம் விளையாட வருவது போலவும், அவன் தன்னுடனேயே இருப்பது போலவும் அவள் எண்ணிக் கொண்டாள். சிறுமியான கோதைக்கு, அந்தக் கண்ணன் அவள் உள்ளம் திருடிய கள்வனாகத் தெரிந்தான்.
தந்தை முதலியோர் கண்டு வியக்கும்படி, இளமை முதலே எம்பெருமான் பக்கலில் பக்திப் பெருவேட்கை கொண்டிருந்தாள் கோதை. சிறுவயது முதல் தன்னுடன் மனத்தால் விளையாடி எப்போதும் தன்னுடனேயே இருந்து வந்த அந்தக் கண்ணனையே தாம் மணம் செய்துகொள்வதாகக் கருதினாள். அப்படி, அவனது பெருமைகளையே எப்போதும் சிந்தித்து, துதித்து வாழ்ந்து வந்தாள் கோதை நாச்சியார்.
பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலை கட்டி அழகு பார்க்கும் நந்தவனக் கைங்கர்யத்தையே வேள்வியாகச் செய்துவந்தார் அல்லவா? அப்படி அழகாகப் பூத்துக் குலுங்கும் பூக்களை அரங்கனுக்குப் படைப்பதற்காக மாலை கட்டிச் செல்வார். அவ்வமயம், இவருடைய மூக்கினால் அந்தப் பூக்களின் வாசனையை அறியாமல் நுகர்ந்துவிடும் வாய்ப்பும் இருந்தது. அப்படி, தான் நுகர்ந்து பார்த்த பூவின் வாசனையையா அந்த அரங்கனும் நுகர்வது என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றியது. தன் எச்சில் அந்தப் பூக்களில் படாதவண்ணம் இருக்க முகத்திலே மூக்கை மறைத்தாற்போல் துணியைக் கட்டிக் கொண்டு அந்தப் பூக்களைப் பறித்து மாலை கட்டுவாராம். அவ்வளவு தூரம் அரங்கனுக்குப் படைக்கும் பூவில் தூய்மையைக் கடைப்பிடித்த பெரியாழ்வாருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
இங்கே பெரியாழ்வார் கட்டி வைத்த மாலைகளையே கண்கொட்டாமல் பார்த்துவந்த கோதைக்கு, அதன் அழகும் கம்பீரமும் பெரிதும் கவர்ந்தன. அதைக்காட்டிலும், இந்தப் பூவைச் சூடிக்கொள்ளும் அரங்கன் என்ன அழகாகத் தோற்றமளிப்பான் என்கிற எண்ணமும் அவள் மனத்தே உதித்தது. புத்தம் புதிதாகப் பூத்த பூக்களின் புதுமை வாடிவிடுவதற்குள்ளே அதே மணத்தோடு அதை அழகு பார்க்க விரும்பினாள். தன்னையே அந்த அரங்கனாக உருவகப்படுத்திக் கொண்டாள்.
அவளுள் இப்போது அரங்கன். தூய்மை போற்றிய பெரியாழ்வாரின் அந்தப் பூக்குடலையிலிருந்து பூமாலையைக் கையில் எடுத்தாள். தன் கழுத்தில் சூடி இப்போது அதன் அழகை ரசித்தாள். கண்ணாடி எதிரே இருந்தது. அதன் அருகில் சென்றாள். அந்தக் கண்ணாடி முன்னே மாலை சூடிய வண்ணமாய் அவள் நின்றிருந்தாள். ஆனால் அந்தக் கண்ணாடியிலோ அரங்கன் மாலை சூடி அவளுடன் கள்ளச் சிரிப்பு பூத்தவனாய்த் தோற்றமளித்தான். பின்னர் அந்த மாலையை அப்படியே கழற்றி, பெரியாழ்வார் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் அந்தப் பூக்குடலையினுள் வைத்துவிடுவாள்.
நாள்தோறும் இந்த நாடகம் நடந்து வந்தது. கோதை சூடிக் களைந்த மாலைகளை அரங்கனும் மிகுந்த உவப்போடு சூடி வந்தான். பெரியாழ்வாரும் வழக்கம்போலவே தன் பணியைச் செய்து கொண்டிருந்தார்....
ஒரு நாள்.... பெரியாழ்வார் பூக்குடலை ஏந்தி அரங்கன் சன்னிதிக்குச் சென்றார். பூக்குடலையிலிருந்து மாலையை வெளியே எடுத்தார். மாலையைப் பார்த்த அக்கணம் அவருக்கு மனத்தில் தூக்கிவாரிப் போட்டது. காரணம் அந்த மாலையில் நீளமான தலைமுடி ஒன்று அவர் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. அவ்வளவுதான் துக்கம் மேலிட இல்லத்துக்கு ஓடினார். இவ்வளவு தூய்மையாக இருந்தும் எப்படி இத் தலைமுடி அரங்கன் சூடும் மாலையில் வந்தது?
மறுநாள் அவருக்கு விடை கிடைத்துவிட்டது. அவரின் பெண்பிள்ளை கோதை, அரங்கனுக்கு வைத்த மாலையைத் தான் சூடி, பின் அரங்கன் சூடுவதற்காக பூக்குடலையில் வைத்ததை பின்னிருந்து கண்டுகொண்டார். அடுத்த கணம், எல்லையில்லாக் கோபம் அவருக்கு மூண்டது. தன் செல்ல மகள் கோதையை கோப வார்த்தைகளால் கடிந்து கொண்டார். அவ்வளவுதான்! அன்று அரங்கனின் அலங்காரத்துக்காக அவனுக்கு அணிவிக்கவேண்டிய மாலைகள் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன.
பொழுது அப்படியே சென்றது. இரவும் வந்தது. துயரத்தின் உச்சத்தில் உறங்கிப் போனார் பெரியாழ்வார். கனவிலே காட்சி தந்தான் அரங்கன். தமக்கு மாலை வராத காரணத்தைக் கேட்டான். ஆழ்வாரும், தன் செல்ல மகளின் சிறுமைச் செய்கையைச் சொல்லி ஆறாத்துயர் கொண்டார். அரங்கன் அவரைத் தேற்றினான். நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே தமக்கு மிகவும் உகப்பானது என்பதைச் சொல்லி, கோதை நாச்சியாரின் பிறப்பினைப் புரியவைத்தார்.
கனவு நீங்கி, காலை கண்விழித்த ஆழ்வாருக்கு உண்மை புரிந்தது. செல்லப் பெண்ணைக் கோபித்ததற்காக வருத்தப்பட்ட ஆழ்வார், மறுநாள் பூத்தொடுத்து அந்த மாலைகளை கேட்காமலேயே அவள் கையில் கொடுத்து அணியச் சொன்னார். பின்னர் அதை வாங்கிக்கொண்டு அரங்கனின் சந்நிதி நோக்கி விரைந்தார். தந்தையின் செயலால் விழி அகல விரித்து விசித்திரப் பார்வையோடு நின்றிந்தாள் கோதை.
விஷ்ணுசித்தர் தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கண்டார். அவளுக்கு, ஆண்டாள் என்றும், மாதவனுக்குரிய மலர் மாலையைத் தாம் சூடிப் பார்த்து, பின்பு அரங்கனுக்குக் கொடுத்தது காரணமாக, சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் பெயரிட்டு அழைத்துவந்தார்.
நாட்கள் சென்றன. இறை அறிவும் பக்தியும் உடன் வளர்த்து வந்த ஆண்டாள், தமக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் மேல் விருப்பம் மிகக் கொண்டவளானாள். அவன் மீதான காதல் அதிகரித்தது. இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் பிரிந்திருக்க முடியாது என்னும் கருத்துடன், கண்ணனுடைய பிரிவை ஆற்றாத ஆயர் மங்கையர் போலத் தாமும் நோன்பு நோற்று உயிர் தரிக்க மாட்டாதிருந்தாள். இத்தகைய தன் எண்ணத்தை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற திவ்வியப் பிரபந்தங்களின் மூலமாக அந்தக் கண்ணனிடத்தே விண்ணப்பம் செய்து வந்தாள்.மணப் பருவத்தே வந்து நின்ற இந்தப் பெண்ணைப் பார்த்து, தந்தையாரான பெரியாழ்வார் அவளுடைய மண வினை பற்றி பேசத் தொடங்கினார். ஆண்டாளோ, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று உறுதியாக உரைத்தாள்.அவ்வளவில் பட்டர்பிரான், பின் என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும், யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன் என்றுரைத்தாள்.
பின்னர் கோதை, தம் தந்தையாகிய பட்டர்பிரானிடம், நூற்றெட்டுத் திருப்பதிகளிலும் எழுந்தருளி சேவை சாதிக்கும் இறைவனின் பெருமைகளை விளங்க எடுத்துக் கூறியருள வேண்டும் என்று வேண்டினாள். அவரும் அவ்வாறே விரித்துக் கூறி வந்தார். அப்படிக் கேட்டு வருகையில், வடமதுரையில் எழுந்தருளும் கண்ணபிரானது வரலாற்றைக் கேட்ட அவ்வளவிலே மயிர் சிலிர்ப்பும், திருவேங்கடமுடையானது பெருமையை செவிமடுத்தபோது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலை மலையழகரின் வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மனமகிழ்ச்சியும் பெற்றாள்.
அடுத்து திருவரங்கன் பெருமை செவியில் பட்ட அம்மாத்திரமே அளவற்ற இன்பம் மனத்தே அலைமோத நின்றாள். அவர்களுள் அரங்கநாதனிடம் மனத்தைச் செலுத்தி, அவனுக்கே தம்மை மணமகளாக நிச்சயித்து, அவனையே எண்ணியிருந்தாள் கோதை.
கோதை நாச்சியார் தம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்ள எண்ணி வில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், அப்பதியிலிருந்த பெண்களையும் தம்மையும் ஆயர்குல மங்கையராகவும், வடபெருங்கோயிலை நந்தகோபன் மனையாகவும், அப்பெருமானைக் கண்ணனாகவும் கருதி, திருப்பாவையைப் பாடியருளினாள். அதன் தொடர்ச்சியாக பின் பதினான்கு திருமொழிகளைப் பாடினார். இதற்கு நாச்சியார் திருமொழி என்று பெயர் ஏற்பட்டது.
கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய ஆழ்வாரும், நம்பெருமாள் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ? என்று எண்ணியவாறு இருந்தார். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி, நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம் என்று திருவாய் மலர்ந்தருளினான். அதே நேரம், கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, நீவிர் குடை, கவரி, வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் சென்று, பட்டர்பிரானுடன் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக என்று பணித்தான். மேலும் பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினான்.
மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். கோயில் பரிவார மாந்தரும் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கப் பிரான் காட்சி அளித்துச் சொன்ன செய்திகளை அறிவித்தனர்.
பட்டர்பிரான் இறைவனது அன்பை வியந்து போற்றினார். பின்னர் மறையவர் பலர் புண்ணிய நதிகளிலிருந்தும் நீர் கொண்டு வந்தார்கள். கோதையின் தோழிகள் அந்நீரினால் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தி, பலவாறு ஒப்பனை செய்தனர். தோழியர் புடைசூழ கோதை தமக்கென அமைந்த பல்லக்கில் ஏறினார். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.
இப்படி எல்லோரும் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்தே, பலரும், ஆண்டாள் வந்தாள்! சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்! கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! பட்டர்பிரான் புதல்வி வந்தாள்! வேயர் குல விளக்கு வந்தாள்! என்று அந்தப் பல்லக்கின் முன்னே கட்டியம் கூறிச் சென்றனர். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.
பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுதற்காகத் தவமாய்த் தவமிருந்த அந்தப் பெருமாளைக் கண் குளிரக் கண்டாள். அகிலத்தையே வசீகரிக்கும் அந்த அரங்கனின் அழகு, ஆண்டாளைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே! சூடிக்கொடுத்த நாச்சியாரின் சிலம்பு ஆர்த்தது. சீரார் வளையொலித்தது. கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை நடந்து அரங்கன் அருகில் சென்றாள். அமரரும் காணுதற்கு அரிய அரங்கனின் அருங்கண்ணைக் கண்ட அந்நொடியில், அவள் இன்பக் கடலில் ஆழ்ந்தாள். உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையில், அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. சீதாபிராட்டியாகத் தான் கொடுஞ்சிறையில் தவித்தபோது, இந்த ராமன்தானே தனக்காக கல்லும் முள்ளும் பாதங்களில் தைக்க, கால் நோக நடந்து வந்து நம்மை மீட்டான். அவன் இப்போது சயனித்திருக்கிறான். அவன் கால் நோவு போக்க நாம் அவன் திருவடியை வருடி, கைமாறு செய்வோமே எனக் கருதினாள். அவனைச் சுற்றியிருந்த நாகபரியங்கத்தை மிதித்தேறினாள். நம்பெருமான் திருமேனியில் ஒன்றிப் போன அப்போதே அவள் அவன்கண் மறைந்து போனாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.
காணுதற்கரிய இக்காட்சி கண்டு பிரமித்துப் போய் இருந்தார்கள் ஆழ்வாரும் மற்றவர்களும். அரங்கன் ஆட்கொண்ட அந்த ஆண்டாள் அரங்கனையே ஆண்ட அதிசயத்தைக் கண்டு எல்லோரும் பக்திப் பரவசத்தில் திளைத்திருந்தனர். அவர்களின் வியப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் திருவரங்கன் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகில் அழைத்தான். கடல் மன்னனைப் போல் நீரும் நமக்கு மாமனாராகிவிட்டீர் என்று முகமன் கூறி, தீர்த்தம், திருப்பரிவட்டம், மாலை, திருச்சடகோபம் முதலியன வழங்கச் செய்தான்.
எல்லாம் பெற்றுக்கொண்டு, சொன்னவண்ணம் தன் மகளை ஏற்றுக்கொண்ட மகிழ்வில் பெரியாழ்வாரும் வில்லிபுத்தூர் திரும்பினார். முன் போல இறைவனுக்கு நந்தவனக் கைங்கர்யம் கைக்கொண்டு, எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்து, இறைமையின் இருப்பிடம் அடைந்தார்.

திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் கொண்டு வரப்பட்டு திருப்பதி ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.. --பிரபந்தம்

மார்கழியின் சிறப்பு

ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். பகல் பொழுது உத்தராயணம் என்றும், இரவுப் பொழுதை தட்க்ஷிணாயணம் என்றும் சொல்வார்கள். உத்தராயணம் தொடங்கும் முன், வருகின்ற மார்கழி மாதமே தேவர்களுக்கு உஷத் காலம். இறைவனை எண்ணி தியானம், ஜபம் செய்ய தேவர்களின் உஷத் காலமான மார்கழி மாதம்தான் மிகவும் உயர்ந்தது.
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். மார்கழி மாத தொடக்கத்தில்தான் பாரதப் போர் தொடங்கியது. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்ததும் மார்கழி மாதமே!
பாரதப் போர் முடிவடையும் சமயம் பிதாமகர் பீஷ்மர், அம்புப் படுக்கையில் சயனித்திருந்த பொழுது அவர் உச்சரித்ததே விஷ்ணு சகஸ்ரநாமம். விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்தும் மார்கழி மாதமே!
பகவான் நாமம் ஒன்றே கலியுகத்தில் பக்தி மார்க்கத்திற்கு வழி என்று பகவானனே பீஷ்மர் வாயிலாக சகஸ்ரநாமத்தை அருளினார்.
வைணவத் திருத்தலங்களில் பெரும் உற்சவமாகக் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருநாள், மார்கழி மாதத்தில்தான் வருகிறது.
நடராஜப் பெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். மார்கழி மாதத்தின் மற்றொரு விசேஷ நாள் ஸ்ரீஅனுமத் ஜெயந்தி. மார்கழி மாதம் அமாவாசைஅன்று, மூலம் நட்சத்திரத்தில் வாயு மைந்தன் ஆஞ்சநேயன் பிறந்தார். இதுவும் மார்கழி மாதத்தின் சிறப்பு.
ஓசோன் வாயு: மார்கழி வைகறைக் காலத்துப் பனியை அனுபவிப்பது ஒரு சுகம். பனி, படிப்படியே அதிகம் ஆகின்றபோது, அதை அனுபவிக்க தகுந்த உடல் உறுதியும், உள்ள உறுதியும் இருக்க வேண்டும். பனிப்படலத்தை ஊடுருவி வருகின்ற மெல்லிய காற்று தருகின்ற குளிர்ச்சி, சுகம் சுகமே. இந்த இரட்டைச் சுகங்களுடன் மற்றொரு சுகம் மார்கழியில் மட்டும் அதிகமாக கிடைக்கின்றது. வளிமண்டலத்தில் ஓசோன் என்ற வாயுப்படலம் நில உலகத்தில் இருந்து 19 கி.மீ. உயரத்தில் பரந்துள்ளது. இப்படலம் சூரியனிடம் இருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது. விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. மார்கழி விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜை செய்தனர். நோன்பு நோற்றனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கு ஒரு தனிப்பெருமை கிடைத்தது.
கவுரி நோன்பு: மகளிர் நோன்பு நோற்பதற்கு தகுந்த மாதம் மார்கழி, பாகவத புராணத்தில் இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு. ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை-பார்வதியை வழிபட்டனர். ஸ்ரீகிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினர். கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளால் ஒன்று என்றேக் கூறலாம். மார்க் சீர்ஷம் என்ற தொடர் மார்கழி என்று மாறியது. மார்க் சீர்ஷம் என்றால் தலையாய மார்க்கம். இதன் வேறு பெயர் தனுர் மாதம்.
ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தாரில் நீராட்டு, தைலக்காப்பு விழா மார்கழியில் நடைபெறுகிறது. ஆவுடையார் கோவில், மதுரை, சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம் முதலிய சிவத்தலங்களில் மாணிக்கவாசகர்-திருவெம்பாவை உற்சவம், மார்கழியில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த உற்சவம் பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். மாணிக்கவாசகருக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகங்களுடன் பவனி ஊர்வலமும் உண்டு. பத்தாம் நாள் நடைபெறுவதே திருவாதிரை.

மார்கழியின் சிறப்பு


திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள். மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த விரதம் அமைந்தது. இந்த விரதத்தை இப்போதும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம். காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். உதாரணமாக, மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.
மார்கழி நைவேத்யம்
மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களிலுமே அதிகாலையில் பூஜை நடக்கும். கோயில்களில் மட்டுமின்றி வீட்டையும் சுத்தம் செய்து, காலை 8.30 மணிக்குள் எளிய பூஜை ஒன்றை பெண்கள் செய்யலாம். திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும். திருவிளக்கேற்றி, நம் இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த பாடல்களை பாட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் முதலானவை செய்வதற்கு எளியவையே. கற்கண்டு சாதம் அமுதம் போல் இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். கன்னிப்பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் முதலானவற்றை நைவேத்யம் செய்யலாம்.

மார்கழியின் சிறப்பு


மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் கால கணிப்பு
முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள் , 20 நாடி , 53 வினாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை , திருப்பள்ளியெழச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஸ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்இந்த மாதத்தில் எல்லா
பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும், திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த மாதம் என்றும் ,ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும்மாதம் என்றும் சிலரும் , தை மாதத்தில் கொண்டாடும் அறுவடை விழாவைச் சிறப்பாககொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றைவீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்மார்கழி இல்லை , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்றும் சிலரும் கூறுகின்றனர்.போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான்.
மார்கழி மாதத்தில் அதிகாலை சூரியனிடத்து ஒளிர்ந்து வீசுகின்ற சூரிய கதிர்'ஓஸோஸான்' , மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.

புதன், டிசம்பர் 15, 2010

வைகுண்ட ஏகாதசி


நமது வாழ்நாளில் ஒரு வருடம் தேவ வருஷத்தில் ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி முடிய உள்ள ஆறு மாதம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் இருப்பதால் இப்பகுதி இரவுக் காலத்தில் அதிக இருட்டும், மழையும், பனியும், குளிரும் பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது. இத்தணத்தில் மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி (பிரம்ம முகூர்த்தம்) உள்ள கால அளவில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுந்தத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பது மரபு.
மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி .அதிகாலை சொர்க்கவால் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். (தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளவர்) அந்த நேரத்தை நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம்.
ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். வருடம் முழுவது ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி காலை பூஜை முடித்து உணவு உட்கொள்ள வேண்டும். இதனால் நம் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவோம் என்பது ஒரு நம்பிக்கை.
ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியாவிட்டாலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். மூன்று கோடி ஏகாதசி விரதம் இருந்த பலனை தரக்கூடியது என்பதால் இந்த ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனப்படும்.
முன்பு முரன் என்ற ஒரு அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மிகுந்த துன்பத்தை தந்து வந்தான். அவர்களது துன்பத்தைப் போக்க மகாவிஷ்ணு முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். போரிட்ட களைப்பு நீங்க அறிதுயிலில் இருந்தவரை கொல்ல வந்த முரன், விஷ்ணுவின் ஆற்றலில் இருந்து உருவான தேவ பெண்ணின் ஹுங்காரத்தால் எரிந்து சாம்பல் ஆனான். மகா விஸ்ணு அப்பெண்ணிற்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.
ஏகாதசியின் முந்தய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். மருநாள் ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து நீராடி சொர்க்கவால் திறப்பு நிகழ்ச்சியை ஆலயம் சென்று கண்டு பரந்தாமன் லெட்சுமி தேவியுடன் வருவதை போற்றி வணங்க வேண்டும் .
விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உளுந்து கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்து அல்லது கிடைக்கும் நெல்லிக்காயையாவது உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
துவாதசி அன்று முதல் நாள் கண் விழித்தவர்கள் அதிகாலையில் குளித்து திருமாலை வணங்கி ஹரி ஹரி ஹரி என மும்முறை கூறி சுண்டைக்காய், நெல்லிக்காய், இதில் கொஞ்சம் எடுத்து பல்லில்படாமல் உண்ண வேண்டும் இதற்கு "பாரனை'' (விரதம்) முடித்தல் என்று பொருள்.புதிய வரவு ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் அகாய சூரராக விளங்குவர். பொறுமை, இன்சொல், நுண்ணறிவு, சாந்தமே ஜெயம் எனும் கோபம் தணிந்த ஆற்றல் என சகல நற்குணங்களுடன் இருப்பார்கள்.
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனித் தனியாக தானங்கள் செய்யலாம் என்றாலும் அது எல்லாம் வசதியானவர்கள் தானே செய்ய முடியும் என்ற சோர்வு நிலை வேண்டாம். ஒரு பிடி அகத்திக் கீரையை பசுவுக்கு தானமாகக் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் ஏகாசி அன்று பசுவும் கன்றுமாக தானம் கொடுங்கள் சகல நன்மையையும் உலகம் உள்ள வரை உங்கள் சந்ததியர் பெறுவர்.
அனைத்து விரத நாட்களிலும் அன்னதானம் செய்யப்படும். ஏகாதசி விரத நாளில் உண்ணாமல் இருப்பதும் கண் விழித்து பாசுரங்கள் பாடுபவதும் செய்ய வேண்டும் என்பதால் அன்ன தானம் மட்டும் இந் நாளில் செய்யக் கூடாது. அதற்குப் பதில் பழவர்க்கங்களை தானமாக தரலாம்.
காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை;
கங்கையை மிஞ்சிய தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு ஈடான விரதம் இல்லை. என்பது ஆன்றோர் வாக்கு. இவ்விரதம் இருந்து நற்பலன்களைப் பெறுவோம்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். திருப்பதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 108 திவ்ய தேசங்களிலும் பெருமாளை தரிசித்து பயன் பெறலாம். திவ்ய தேசங்களை மனதில் தியானித்து அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வேண்டுதல்களை செய்து திருமாலின் அருளைப் பெறுவோம். 

செவ்வாய், டிசம்பர் 14, 2010

வைகுண்ட ஏகாதசி

இந்த நன்னாள் இந்த மாதம் 17 ந் தேதி வெள்ளிக் கிழமை வருகிறது.
அன்று முழுவதும் துளசி தீர்த்தம் அருந்தி, அன்று இரவு முழுவதும் கண் விழித்து இருந்து நாராயண நாமம் சொல்லி .மறுநாள் துவாதசி அன்று காலையில் சாப்பிட்டு விரதம் முடிப்பது மரபு.
இந்நாளைப் பற்றி சிலவிஷயங்கள் நம்பப்படுகிறது.
1. ஏகாதசி விரதம் இருந்தாலே போதும்? செய்த பாவங்கள் தீர்ந்து விடும். is it ?
அப்ப எந்த பாவம் வேண்டுமானாலும் செய்து விட்டு just இந்த விரதம் இருந்தால் சரியாகி விடுமோ? பாவவான்கள் புண்ணியவான்கள் ஆகிவிடுவார்களா? so simple
2. இந்த நாளில் மரணம் அடைபவர்கள் எத்தகைய பாவிகளாக இருந்தாலும் straight ஆக சொர்க்கம் போய்விடுவார்கள்; is it?
நாம் பாவங்களை செய்து கொண்டே இருப்போம்; ஏகாதசியன்று விரதம் இருந்து பாவ விமோசனம் பெறலாம் என்று அர்த்தம் இல்லை.
ஒரு குட்டிக் கதை-
ஒரு முனிவரும், அவர் சீடரும், ஒரு நதியைக் கடக்க படகுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு தாசிப் பெண், அக்கரை செல்ல வந்தாள். அவளைக் கண்ட முனிவர் "இழிந்த தொழில் செய்யும் நீ, நாங்கள் செல்ல இருக்கும் படகில் வரக் கூடாது; பாவம் செய்பவள் நீ; வேறு படகில் வா" எனக் கடிந்து கொண்டார்.
அவள் மனம் வருந்தி ஒதுங்கி நின்று கொண்டாள். நிர்பந்தம் காரணமாகவே இத்தொழில் இருப்பது தெரியாமல் முனிவர் பேசிவிட்டாரே என மிகுந்த வேதனை அடைந்தாள். அதனால் நெஞ்சு வலி வந்து மரணம் அடைந்தாள்.
முனிவர் சென்ற படகு கவிழ, நீச்சல் தெரிந்த படகோட்டியும், சீடரும் தப்பி விட்டனர்.முனிவரோ நீரில் மூழ்கி இறந்தார்.
இறந்த பெண்ணும், முனிவரும் எமனுலகம் சென்றனர். ஒரே இடத்தில் நின்றனர்.பின் நரக வாசல் வழியே முனிவரும், சொர்க்க வாசல் வழியே பெண்ணும் அழைத்துச் செல்லப் பட்டனர்.
கோவம் அடைந்த முனிவர் " இதென்ன அநியாயம்! தவமே வாழ்வாகக் கொண்ட நான் நரகம் செல்வதா? பாவத் தொழில் செய்த பெண்ணிற்கு சொர்க்கமா ?" எனக் கேட்டார். யம தூதர்கள் " முனிவரே, பிறரை குறை கூறுபவர்கள், அவர்கள் நிலை அறியாது நிந்தித்துப் பேசுபவர்கள், எவ்வளவு பெரிய தபஸ்வியாக இருந்தாலும் தங்களது மேலான தவ வலிமையை இழந்து சாதாரணமானவர்களை விடவும் கீழ் நிலைக்குப் போய் விடுவார்கள். மேலும் நீர் ,அவள் மனதை குத்தி காயப் படுத்தினீர்கள்; பிறர் மனத்தைக் காயப்படுத்துபவர்களின் கண்களை குத்துவது எங்கள் வழக்கம்; இப்போது உங்கள் கண்களும் பறிக்கப்படும். அந்த பெண்ணோ இழிந்த இப்படி ஒரு வாழ்வு , இனி வரும் பிறவிகளில் வரக்கூடாது என, ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை நினைத்து கண்ணீர் வடித்து வாழ்நாள் எல்லாம் அவர் நினைவாகவே வாழ்ந்தாள்; அதனால் அவள் வைகுண்ட பதவியைப் பெறுகிறாள்" என்று கூறி அழைத்துச் சென்றனர்.
so வெறும் விரதங்களும், தவங்களும் சொர்க்கத்தை தராது. பிறர் மீது நாம் காட்டும் கருணையும், இரக்கமுமே சொர்க்கத்தை தரும். 

பாகற்காய் வறுவல்

தேவையான பொருட்கள்-
பாகற்காய் ----------------- 3
மஞ்சள் தூள் -------------- 1 ts
சாம்பார் மிளகாய்த் தூள் --- 4ts
கெட்டியான புளித்தண்ணீர் --- 3 tbs
பொடித்த உருண்டை வெல்லம் --- 3 tbs
உப்பு -------------------------------- தேவையான அளவு
எண்ணை --------------------------- 4 tbs
செய்முறை-
காயை கழுவி வட்ட வட்டமாக நறுக்கவும். விதைகளை நீக்கவும்.
மஞ்சத்தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்புடன் நீரில் வேகவைக்கவும்.
தண்ணீரை வடிகட்டவும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும், காய்த் துண்டுகளை போடவும்.
அதில் மூன்று ts மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
பின் அதில் புளித்தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
இப்போது பொடித்த வெல்லத் தூள் போட்டு பிரட்டவும்.
வேண்டுமானால் எண்ணை கொஞ்சம் ஊற்றி வதக்கவும்.
சிவக்க வறுக்கவேண்டும்.
கசப்பு தெரியாது.

தானியக் குழம்பு

தேவையான பொருட்கள்-
காய்ந்த சிவப்புக் கலர் காராமணி -----1/4 கப்
[தட்டப் பயறு]
காய்ந்த பட்டாணி------------------------1/4 கப்
வெள்ளை சுண்டல் கடலை -------------1/4 கப்
முளைவந்த பாசிப் பயறு -----------------1/4 கப்
இவற்றை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் அளவான தண்ணீரில் சிறிது உப்பிட்டு வேகவைக்கவும்.
தண்ணீர் இருந்தால் வடித்து வைக்கவும். பயன்படுத்தலாம்.
வறுத்து அரைக்க-
சீரகம்----------------------2 ts
கருவேப்பிலை ----------- கொஞ்சம்
காய்ந்த மிளகாய்---------6-7
துருவிய தேங்காய் -------- 1/4 கப்
தனியா தூள் ----------------2 ts
இரண்டு ts எண்ணையில் மேலே உள்ள வரிசைப்படி பொருட்களைப் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வணக்கவும்.
தேங்காய் நன்கு வறுபடணும். குறைந்த தணலில் வைத்து செய்யவும்.
ஆறியதும் இதனுடன், வேகவைத்த தானியங்கள் ஒவ்வொன்றும் ஒரு tbs அளவில் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
ஒரு கடாயில் 3 ts எண்ணை ஊற்றி கொஞ்சம் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சிறியதாக அரிந்த ஒரு தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
அதில் அரைத்ததைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த தானியங்களைப் போடவும். உப்பு போடவும்.
வேகவைத்த நீரோ, அல்லது தேவையான அளவு நீரோ சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு ஓரளவிற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
மேலே மல்லித் தளை போடவும்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல side dish .

வியாழன், டிசம்பர் 09, 2010

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

எல்லோராலும் விரும்பப் படுவது அழகு. அழகாக இருக்க விரும்பாத பெண்கள்
[ஆண்களும்தான்] யாராவது இருக்கிறார்களா!பெண்கள் இயற்கையிலே ஏதாவது ஒரு விதத்தில் அழகுடையவர்களாக பிறக்கிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்தத் தெரியாததால், அல்லது அக்கறை இல்லாததால் அழகு இருந்தும் அழகற்றவர்களாய் தெரிகிறார்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி வீட்டில் இருக்ககூடிய பொருட்களைப் பயன்படுத்தி பளிச்சென்று இருக்க முயற்சி செய்வோம்.
முகம், கழுத்து, கைகள் பளிச்சென்றும் ,மிருதுவாகவும் இருக்க-
பெரிய எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்து வடி கட்டவும்.
சம அளவு நல்ல கிளிசரின் கலந்து வைக்கவும்.
3-4 மாதங்கள் கெடாது.
காலையில் முடியை மேல் நோக்கி வாரி முடிந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
இந்த கலவை ஒரு ஸ்பூன் +++தயிரின் மேலாடை ஒரு ஸ்பூன் கலக்கவும்.
இந்த கலவையை விரல்களால் மேல் நோக்கியும்,சர்குலர் முறையிலும் முகத்திலும், கழுத்திலும் தேய்க்கவும்.
கைகளில் முழங்கையிலிருந்து நுனி விரல்கள் வரை நன்றாகத் தடவவும்.
முக்கியமாக, மேஜை மேல் கைகளை ஊன்றிக் கொண்டு வேலை செய்வதால் கைகளின் பின்புறத்தில் காய்த்து, கருத்துப் போய் இருக்கும் இடங்களில் தடவி மென்மையாக தேய்த்து விடவும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, இளம் சூடான நீரில் கழுவி விட்டு, ஏதாவது கிளிசரின் சோப்பு பயன் படுத்தி அலம்பவும்.

கால்களை பாத்து நிமிடமாவது வெதுவெதுப்பான சோப்பு அல்லது சாம்பூ கலந்த நீரில் வைக்கவும். பழைய டூத் பிரஷ் அல்லது pumic stone அல்லது scarubber கொண்டு நகங்களின் பக்கமும், குதிகாலிலும் நன்றாகத் தேய்க்கவும்.இதனால் உலர்ந்த தோல் நீக்கப்படும். பீன் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் ரத்த ஓட்டம் அதிகம் ஆகும்.
நீரில் ஊறியதால் நகங்கள் மென்மையாக இருக்கும். இப்போது nail cutter கொண்டு நகங்களை சீராக வெட்டவும். கோல்ட் கிரீம் அல்லது தேங்காய் எண்ணையை நகங்களின் மேல் தடவி filer பயன்படுத்தி நகங்களின் உட்புறமாக வளைவாகத் தேய்த்தால் அங்குள்ள உலர்ந்த சருமம் அகன்று விடும். எண்ணை அல்லது கீரிமை கால்களில் நன்றாகத் தேய்த்து விடவும். இதனால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் தெரியும்.
எலுமிச்சை தோலால் நகப்பகுதிகளைத்துடைத்துக் கொண்டால் நகங்கள் பலப்படும் ; சீக்கிரம் உடையாது.
களைப்பாக இருக்கும் போது மிதமான வெந்நீரில் நாலைந்து சொட்டு நீலகிரித் தைலத்தை விட்டு கால்களை அதனுள் வைத்துக் கொள்ள வேண்டும்.தளர்ச்சி நீங்கியவுடன் பத்து அல்லது பதினைந்து நிமிடம் கால்களுக்கு ஓய்வு தர வேண்டும். இந்த சிறிய ஓய்வினால் கால்கள் புத்துணர்ச்சி பெறும்.

கண்களுக்கு ஓய்வு தேவை. கண்களை இரு கைகளினால் மூடிக் கொண்டு மேஜையில் முழங்கையை ஊன்றிக் கொள்ள வேண்டும்.
தலையை கீழாக சரித்து வெளிச்சம் கண்களை அணுகாமல் கழுத்து தசைகளை தளர்த்திக் கொண்டு 5-10 நிமி இருக்கவும்.
கண்களுக்குக் கீழ் சுருக்கம் விழுவதை தவிர்க்க-கண்களை குளிர்ந்த நீரால் அடிக்கடி கழுவ வேண்டும்.
விளக்கெண்ணை அல்லது eye cream தடவிக் கொண்டு தூங்கலாம்
அதிக வேலை, கவலைகள், தூக்கமின்மை ,வயது போன்ற காரணங்களால் கண்ணுக்கு கீழ் கருவளையும் தெரியும். இந்த காரணிகளை போக்கி கொள்ள முயற்சி செய்யுங்கள்; முடியாவிட்டால் ?????????????
வெள்ளரி சாறை பஞ்சில் தோய்த்து கண்களின் மேல் பத்து நிமிடம் வைக்கவும்.
பன்னீரையும் இது போல் பயன் படுத்தலாம்.
உருளைக் கிழங்கின் சாறு, பொதினா சாறையும் கருவளையத்தின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
எலுமிச்சை சாறும் தடவலாம்.
நறுக்கிய வெள்ளரி ஸ்லைஸ்களை மூடிய கண்களின் மேல் 15 நிமி வைக்கலாம்.
தினமும் 5-10 நிமிடங்கள் விழிகளை மேலும், கீழும், இரு பக்கங்களிலும் சுழற்றி செய்யப்படும் பயிற்சியால் கண்கள் சுறுப்சுறுப்படைந்து விளங்கும்.
தூசி, அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது தரமான cooling glass
அணிந்து செல்வது நல்லது.

செவ்வாய், டிசம்பர் 07, 2010

கூந்தல் பராமரிப்பு

சில ஹெர்பல் ஷாம்பூ-
வேப்பிலை ஷாம்பூ-
சந்தனப் பவுடர் -------125 கிராம்
சீகைக்காய்ப் பவுடர் ---- 500 கிராம்
வேப்பிலைத்தூள் ------- 400 கிராம்
கடலைமாவு ------------- 500 கிராம்
இவற்றை நன்கு கலந்து இரண்டு, மூன்று முறை சலித்து ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.
எல்லா விதமான முடிக்கும் பயன் படுத்தலாம்.

சந்தன ஷாம்பூ-
சீகைக்காய்---- 100 கிராம்
சந்தன எண்ணை-4 ts
தண்ணீர் ----------- 1250 மிலி
ரீத்தா--------------- 100 கிராம்
ஆம்லா [நெல்லிக்காய் தூள்] ------- 50 கிராம்
கசகசா --------------- 50 கிராம்
புங்கங்காய் --------- 50 கிராம்
எண்ணையைத் தவிர பிற பொருட்களை தண்ணீரில் போட்டு காய்ச்சவும்.
சீகைக்காய், புங்கங்காய்- தட்டிப் போடவும்.
பாதியாக சுண்டியதும் இறக்கவும்.
ஆறியதும் வடி கட்டவும்.
சந்தன எண்ணைக் கலந்து பயன் படுத்தவும்.
எண்ணைப் பசை அதிகம் உள்ள முடிக்கு நல்லது.

லாவண்டர் ஷாம்பூ-
சீகைக்காய் ----------- 100 கிராம்
ஆம்லா ----------------- 50 கிராம்
மருதாணி ---------------- 2 கைபிடி
கசகசா -------------------- 50 கிராம்
ரீத்தா ---------------------- 100 கிராம்
தண்ணீர் ------------------- 1250 கிராம்
லாவண்டர் எண்ணை -------- 4 ts
எண்ணையைத் தவிர மற்ற பொருட்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் காலையில் பாதியாகும் வரை காய்ச்சவும்.
ஆறியதும் வடிகட்டி, லாவண்டர் எண்ணை கலந்து பயன் படுத்தவும்.

இயற்கை கண்டிஷனர்-
வீட் ஜெர்ம் ஆயில் --------- 1 tbs
கிளிசரின் -------------------- 1 tbs
பசும்பால் --------------------- 1 tbs
தேங்காய்ப் பால் --------------1 tbs
முட்டையின் மஞ்சள் கரு ----- 1
நன்கு கலந்து முடியில் நன்கு தேய்த்து , பின் மிதமான சூட்டில் தண்ணீர் ஊற்றி அலசவும். இது கூந்தலுக்கு மெருகூட்டும்.

சீகைக்காய்ப் பொடி தயாரிக்கும் முறை-
சீகைக்காய் ----------------- 500 கிராம்
பாசி பயறு அல்லது பாசி பருப்பு ---- 250 கிராம்
வெந்தயம் -------------------------- 100 கிராம்
கருவேப்பிலை ---------------------- மூன்று கைபிடி
வேப்பிலை ---------------------------- மூன்று கைபிடி
துளசி ------------------------------------ மூன்று கைபிடி
செம்பருத்தி இலை---------------------- மூன்று கைபிடி
[இது கிடைக்கவில்லை என்றாலும் no problem]
வெயிலில் நன்கு காய வைத்து அரைக்கவும்.
மைக்ரோ ஓவன் இருந்தால் அதில் இலைகளை 5-6 நிமி வைத்து எடுக்கலாம்.
இலைகள் மொருமொருவென்று இருந்தால்த் தான் நன்கு அரைபடும்.

திங்கள், டிசம்பர் 06, 2010

குரு பகவான்

நவகிரகங்களில் "நல்ல கிரகம்" எனக் கூறப் படுவார். குரு பார்க்க கோடி நன்மை என்பர்.இந்த குருவருள் இருந்தால் நமக்கு திருவருள் கிடைக்கும்.

நம் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என நால்வரை வரிசைப் படுத்தி வைத்துள்ளனர். குழந்தை பிறந்தவுடன் முதன் முதல் தாயைத் தான் பார்க்கிறது. அதனால் தாயிற்கு முதல் இடம். இவர்தான் உன் தந்தை என தந்தையை தாய் அறிமுகம் செய்து வைப்பதினால் தந்தைக்கு இரெண்டாம் இடம். பிறகு தாய்,தந்தை தங்கள் குழந்தைக்கு நல்ல அறிவு, ஆற்றல் வளரச் செய்ய சிறந்த ஆசிரியரிடம் சேர்ப்பதினால் குருவுக்கு மூன்றாவது இடம். அந்த குருவானவர் , குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுக்கும் போது இதுதான் தெய்வம் ; இதை வழிபட்டால் நமது வாழ்க்கை ஒளிமயமாக அமையும் என்று நல்வழிப்படுத்துவதால் தெய்வத்திற்கு நான்காவது இடம்.

குருவை நாம் கோவிலுக்கு சென்று வழிபடும்போது அதன் பார்வை நம் மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

சனியை சாய்வாய் நின்று கும்பிடு. குருவை நேராய் நின்று கும்பிடு "என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருவின் சந்நிதியில் நேராய் நின்று வழிபட்டால் பொன்னும், பொருளும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.வியாழக்கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் உள்ள குருவையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம். நமது முன்னோர்களை நினைத்து வீட்டில் வியாழக்கிழமைகளில் வழிபடலாம்.

திருமணம் ஆக வேண்டியவர்கள் சுண்டல் மாலை சாத்தலாம். மற்ற கோரிக்கை உடையவர்கள் சுண்டலை தானமாகவும், நைவேத்தியமாகவும் கொடுக்கலாம்.
குருவுக்குரிய ஸ்தலங்கள்__

திருச்செந்தூர்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி

சுருட்டப்பள்ளி

குருவித்துறை

தக்கோலம்

திருமறைக்காடு

புளியறை
திருவெற்றியூர்
சூரியனார் கோவில்
இந்த ஆலயங்களுக்குச் சென்றும் குரு பகவானை வழிபட்டு அருள் பெறலாம்.நவரத்தினங்களில் கனக புஷ்பராகமும், மலரில் முல்லையும், நிறத்தில் மஞ்சளும், மரத்தில் அரசும், வாகனத்தில் யானையும், உலோகத்தில் தங்கமும், உணவில் தயிர் சாதமும், தானியத்தில் சுண்டலும் விரும்பி ஏற்பவர் குருபகவான். வியாழன்தோறும் விரதம் இருந்து குருவுக்கு விருப்பமானவைகளை அர்ப்பணித்து வணங்கி அவர் அருள் பெறுவோமாக.

குருபகவான் கவசமான "வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே" என்ற பதிகத்தை தினமும் மூன்று முறை படித்தால் நன்மை உண்டாகும்.

வியாழன், டிசம்பர் 02, 2010

சிறுகுறிப்புகள்

மங்கிப் போன வெள்ளிப் பொருட்கள் மீது விபூதியைப் பூசி தேய்த்து , அதன் பின் ஒரு வெள்ளை துணியால் சுத்தம் செய்யலாம்.
ஊதுபத்திச் சாம்பல் கொண்டும் தேய்க்கலாம்
பொதுவாக வெள்ளிப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்தால் மங்காது.

தங்க நகைகளை detergent soap பயன் படுத்தக் கூடாது. சிறிதளவு வினிகரை நீரில் கலந்து , அதில் நகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து , ஒரு டூத்- பிரஷ் கொண்டு [gentle ] தேய்த்துக் கழுவவும்.
சோப்புக் காயை நீரில் ஊறவைத்து அந்த நீரிலும் தேய்த்துக் கழுவலாம்.
உருளைக் கிழங்கு துண்டுகளை நீரில் போட்டு, அதில் 30 நிமி நகைகளை ஊறவைத்து , தேய்த்து மஞ்சள் கலந்த நீரில் அலசிக் கழுவலாம்.

ஒரு பாத்திரத்தில் வெள்ளி நகைகள் மூழ்கும் அளவு நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது நகைகளை அதில் போட்டு , சில நிமிடங்களில் எடுக்கவும். சுத்தமான காட்டன் துணியால் துடைக்கவும் .

வைர நகைகளை சோப்புக் காய் ஊறவைத்த நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து தேய்த்து [gentle] சுத்தப் படுத்தலாம்.

கற்கள் பதித்த நகைகளை குளியல் சோப்பு கொண்டு சுத்தப் படித்தி பின் சூடான நீரில் அலசி , பிறகு ஒரு சாப்டான டவல் கொண்டு ஈரத்தை ஒற்றி எடுக்கவும்.

முத்துக்களை வருடம் ஒரு முறைதான் சுத்தப் படுத்த வேண்டும். அடிக்கடி சுத்தப் படுத்தினால் அதன் இயற்கை ஷைன் போய் விடும். ஒரு சாப்டான துணியால் முத்து நகைகளை துடைத்து வைக்கலாம்.
முத்துக்களில் தூசி, அழுக்கு படிந்து இருந்தால் சூடான நீரில் மைல்டான சோப்பைக் கொண்டு, make-up போட பயன் படும் பிரஷ் அல்லது painting பிரஷ் கொண்டு சுத்தப் படுத்தலாம்.
முத்து நகைகள் அணியும் போது காதி போன்ற ruff துணிகளை அணிய வேண்டாம்.