புதன், டிசம்பர் 15, 2010

வைகுண்ட ஏகாதசி


நமது வாழ்நாளில் ஒரு வருடம் தேவ வருஷத்தில் ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி முடிய உள்ள ஆறு மாதம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் இருப்பதால் இப்பகுதி இரவுக் காலத்தில் அதிக இருட்டும், மழையும், பனியும், குளிரும் பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது. இத்தணத்தில் மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி (பிரம்ம முகூர்த்தம்) உள்ள கால அளவில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுந்தத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பது மரபு.
மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி .அதிகாலை சொர்க்கவால் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். (தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளவர்) அந்த நேரத்தை நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம்.
ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். வருடம் முழுவது ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி காலை பூஜை முடித்து உணவு உட்கொள்ள வேண்டும். இதனால் நம் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவோம் என்பது ஒரு நம்பிக்கை.
ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியாவிட்டாலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். மூன்று கோடி ஏகாதசி விரதம் இருந்த பலனை தரக்கூடியது என்பதால் இந்த ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனப்படும்.
முன்பு முரன் என்ற ஒரு அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மிகுந்த துன்பத்தை தந்து வந்தான். அவர்களது துன்பத்தைப் போக்க மகாவிஷ்ணு முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். போரிட்ட களைப்பு நீங்க அறிதுயிலில் இருந்தவரை கொல்ல வந்த முரன், விஷ்ணுவின் ஆற்றலில் இருந்து உருவான தேவ பெண்ணின் ஹுங்காரத்தால் எரிந்து சாம்பல் ஆனான். மகா விஸ்ணு அப்பெண்ணிற்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.
ஏகாதசியின் முந்தய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். மருநாள் ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து நீராடி சொர்க்கவால் திறப்பு நிகழ்ச்சியை ஆலயம் சென்று கண்டு பரந்தாமன் லெட்சுமி தேவியுடன் வருவதை போற்றி வணங்க வேண்டும் .
விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உளுந்து கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்து அல்லது கிடைக்கும் நெல்லிக்காயையாவது உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
துவாதசி அன்று முதல் நாள் கண் விழித்தவர்கள் அதிகாலையில் குளித்து திருமாலை வணங்கி ஹரி ஹரி ஹரி என மும்முறை கூறி சுண்டைக்காய், நெல்லிக்காய், இதில் கொஞ்சம் எடுத்து பல்லில்படாமல் உண்ண வேண்டும் இதற்கு "பாரனை'' (விரதம்) முடித்தல் என்று பொருள்.புதிய வரவு ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் அகாய சூரராக விளங்குவர். பொறுமை, இன்சொல், நுண்ணறிவு, சாந்தமே ஜெயம் எனும் கோபம் தணிந்த ஆற்றல் என சகல நற்குணங்களுடன் இருப்பார்கள்.
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனித் தனியாக தானங்கள் செய்யலாம் என்றாலும் அது எல்லாம் வசதியானவர்கள் தானே செய்ய முடியும் என்ற சோர்வு நிலை வேண்டாம். ஒரு பிடி அகத்திக் கீரையை பசுவுக்கு தானமாகக் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் ஏகாசி அன்று பசுவும் கன்றுமாக தானம் கொடுங்கள் சகல நன்மையையும் உலகம் உள்ள வரை உங்கள் சந்ததியர் பெறுவர்.
அனைத்து விரத நாட்களிலும் அன்னதானம் செய்யப்படும். ஏகாதசி விரத நாளில் உண்ணாமல் இருப்பதும் கண் விழித்து பாசுரங்கள் பாடுபவதும் செய்ய வேண்டும் என்பதால் அன்ன தானம் மட்டும் இந் நாளில் செய்யக் கூடாது. அதற்குப் பதில் பழவர்க்கங்களை தானமாக தரலாம்.
காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை;
கங்கையை மிஞ்சிய தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு ஈடான விரதம் இல்லை. என்பது ஆன்றோர் வாக்கு. இவ்விரதம் இருந்து நற்பலன்களைப் பெறுவோம்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். திருப்பதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 108 திவ்ய தேசங்களிலும் பெருமாளை தரிசித்து பயன் பெறலாம். திவ்ய தேசங்களை மனதில் தியானித்து அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வேண்டுதல்களை செய்து திருமாலின் அருளைப் பெறுவோம். 

கருத்துகள் இல்லை: