வியாழன், டிசம்பர் 16, 2010

மார்கழியின் சிறப்பு

ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். பகல் பொழுது உத்தராயணம் என்றும், இரவுப் பொழுதை தட்க்ஷிணாயணம் என்றும் சொல்வார்கள். உத்தராயணம் தொடங்கும் முன், வருகின்ற மார்கழி மாதமே தேவர்களுக்கு உஷத் காலம். இறைவனை எண்ணி தியானம், ஜபம் செய்ய தேவர்களின் உஷத் காலமான மார்கழி மாதம்தான் மிகவும் உயர்ந்தது.
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். மார்கழி மாத தொடக்கத்தில்தான் பாரதப் போர் தொடங்கியது. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்ததும் மார்கழி மாதமே!
பாரதப் போர் முடிவடையும் சமயம் பிதாமகர் பீஷ்மர், அம்புப் படுக்கையில் சயனித்திருந்த பொழுது அவர் உச்சரித்ததே விஷ்ணு சகஸ்ரநாமம். விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்தும் மார்கழி மாதமே!
பகவான் நாமம் ஒன்றே கலியுகத்தில் பக்தி மார்க்கத்திற்கு வழி என்று பகவானனே பீஷ்மர் வாயிலாக சகஸ்ரநாமத்தை அருளினார்.
வைணவத் திருத்தலங்களில் பெரும் உற்சவமாகக் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருநாள், மார்கழி மாதத்தில்தான் வருகிறது.
நடராஜப் பெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். மார்கழி மாதத்தின் மற்றொரு விசேஷ நாள் ஸ்ரீஅனுமத் ஜெயந்தி. மார்கழி மாதம் அமாவாசைஅன்று, மூலம் நட்சத்திரத்தில் வாயு மைந்தன் ஆஞ்சநேயன் பிறந்தார். இதுவும் மார்கழி மாதத்தின் சிறப்பு.
ஓசோன் வாயு: மார்கழி வைகறைக் காலத்துப் பனியை அனுபவிப்பது ஒரு சுகம். பனி, படிப்படியே அதிகம் ஆகின்றபோது, அதை அனுபவிக்க தகுந்த உடல் உறுதியும், உள்ள உறுதியும் இருக்க வேண்டும். பனிப்படலத்தை ஊடுருவி வருகின்ற மெல்லிய காற்று தருகின்ற குளிர்ச்சி, சுகம் சுகமே. இந்த இரட்டைச் சுகங்களுடன் மற்றொரு சுகம் மார்கழியில் மட்டும் அதிகமாக கிடைக்கின்றது. வளிமண்டலத்தில் ஓசோன் என்ற வாயுப்படலம் நில உலகத்தில் இருந்து 19 கி.மீ. உயரத்தில் பரந்துள்ளது. இப்படலம் சூரியனிடம் இருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது. விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. மார்கழி விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜை செய்தனர். நோன்பு நோற்றனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கு ஒரு தனிப்பெருமை கிடைத்தது.
கவுரி நோன்பு: மகளிர் நோன்பு நோற்பதற்கு தகுந்த மாதம் மார்கழி, பாகவத புராணத்தில் இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு. ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை-பார்வதியை வழிபட்டனர். ஸ்ரீகிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினர். கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளால் ஒன்று என்றேக் கூறலாம். மார்க் சீர்ஷம் என்ற தொடர் மார்கழி என்று மாறியது. மார்க் சீர்ஷம் என்றால் தலையாய மார்க்கம். இதன் வேறு பெயர் தனுர் மாதம்.
ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தாரில் நீராட்டு, தைலக்காப்பு விழா மார்கழியில் நடைபெறுகிறது. ஆவுடையார் கோவில், மதுரை, சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம் முதலிய சிவத்தலங்களில் மாணிக்கவாசகர்-திருவெம்பாவை உற்சவம், மார்கழியில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த உற்சவம் பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். மாணிக்கவாசகருக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகங்களுடன் பவனி ஊர்வலமும் உண்டு. பத்தாம் நாள் நடைபெறுவதே திருவாதிரை.

கருத்துகள் இல்லை: