வெள்ளி, டிசம்பர் 11, 2009

கூந்தல் பராமரிப்பு

கீரைத் தைலம்.

தேவையான பொருட்கள்-

கரிசலாங்கண்ணிக் கீரை -3-4 கட்டு

அரிசி களைந்த நீர் -2- 3 டம்ளர்

கடுக்காய் -5 பொடிக்கவும்

தேங்காய் எண்ணை -1/4 கிலோ

நல்லெண்ணெய் -1/4 கிலோ

மருதாணி இலை - ஒரு கை பிடி நசுக்கி வைக்கவும்

செய்முறை-

கீரையை கழுவி, அரிசி களைந்த நீர் விட்டு

மிக்சி அல்லது கல்லுரலில் போட்டு இடித்து

இரண்டு டம்ளர் கெட்டிச் சாறு எடுக்கவும்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சாறு, எண்ணைகள்,

கடுக்காய்ப் பொடி, இடித்த மருதாணி இலை போட்டு

கலக்கி அடுப்பில் வைக்கவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைக்கவும்.

சிறு தணலில் சப்தம் அடங்கி,

அடியில் நெய் கசண்டு போல்

வரும் வரை வைத்திருக்கவும்.

பின் இறக்கி ஆறியதும்,

வெள்ளைத் துணியில் வடிகட்டவும்.

தினமும் இதை கூந்தலில் தடவி வர

கூந்தல் நன்கு வளரும்.

ஞாயிறு, ஜனவரி 18, 2009

கூந்தல் பராமரிப்பு

இளநரை ஒரு பெரிய பிரச்சனைதான். எந்த வயதிலும் வரும். அதற்கு ஒரு ஸ்பெஷல் எண்ணை இதோ;
ஒரு கைபிடி அளவு கருவேப்பிலை, ஐந்து கொட்டை நீக்கப்பட்ட பெரிய நெல்லிக்காய் ,விழுதாக அரைத்து வைக்கவும். கால் லிட்டர் நல்லெண்ணையைக் காய்ச்சி, அரைத்த விழுதுகளை அதில் போட்டால், சட, சட என ஒரு சப்தம் வரும். அச்சப்தம் அடங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். வேறொரு பாத்திரத்தில் கால் லிட்டர் தேங்காய் எண்ணையைக் காய்ச்சி ,புகை வரும் போது அடுப்பை அணைக்கவும். உடனே அதில் 25 கிராம் ஓமத்தைப் போடவும். இதை ஆற விடவும். இதனுடன் நல்லெண்ணெய் கலவையில் பாதிஅளவு, கலந்து வைக்கவும். இதை தினம் தடவி வர, இளநரை போய்விடும்.
இந்த எண்ணை தீர்ந்ததும், மறுபடியும் கால் லிட்டர் தேங்காய் எண்ணையுடன்
25 கி ஓமத்தை சேர்த்து காய்ச்சி,மீதியுள்ள நல்லெண்ணெய் கலவையுடன் கலந்து கொள்ளலாம்.
இந்த எண்ணையை ஒன்றரை மாதம் வரை வைத்துப் பயன் படுத்தலாம்.
நெல்லிக்காய் குளிர்ச்சி என பயப்படாமல் இந்த எண்ணையைப் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணை - coconut oil
நல்லெண்ணெய் -gingelly oil
ஓமம் -tymol seeds
நெல்லிக்காய் -goose berry
கருவேப்பிலை -curry leaves
மற்றொரு முறை-
100 கி மருதாணிப் பவுடர்
100 கி நெல்லிக்காய்ப் பவுடர்
20 கி பிஞ்சு கடுக்காய்ப் பவுடர்
1/4 டீ டிகாசன்
1 எலுமிச்சம் பழ சாறு
ஒரு இரவு முழுவதும் இவற்றைக் நன்கு கலந்து ஊற வைக்கவும். மறுநாள் இதை தலையில் தடவி,நன்கு காய்ந்ததும் நன்கு அலசிக் குளிக்கவும்.
வாரம் ஒரு முறை தவறாமல் போட்டுக் குளிக்கவும். கொஞ்ச நாளில் நரை முடிகள் பழுப்பு நிறமாகி, பின் மெள்ள, மெள்ள கருப்பாகி விடும்.
மற்றொரு முறை-
பிஞ்சுகடுக்காய்,நெல்லிக்காய்,கருவேப்பிலை ...மூன்றையும் சம அளவு யெடுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும். நல்லெண்ணையை சூடுபண்ணவும். எண்ணையில் இடித்ததைப் போட்டு நன்கு ஊறவிடவும். மூன்றும் மூழ்கும் அளவு எண்ணை இருக்க வேண்டும்.
தலைக்குக் குளிக்கும் போது இந்த எண்ணையை லேசாக சூடு பண்ணி, தலையில் நன்றாகத் தேய்த்து சீயக்காய் போட்டு அலசிக் குளிக்க வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது இதைப் பயன் படுத்த வேண்டும்.
மருதாணி பவுடர்- henna powder
கடுக்காய்ப் பவுடர் - gall nut powder

சீயக்காய் பவுடர்- சொபட
மற்றொரு முறை-
1/2 கி நல்லெண்ணையைக் காய்ச்சி அடுப்பை விட்டு இறக்கி வைக்கவும். அதில் நான்கு கைபிடி அளவு [50 கி] கருவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் இந்த எண்ணையை மிதமாக சூடு பண்ணி தலையில் நன்றாக தேய்த்து ஊறி சீயக்காய் போட்டு அலசவும்.
வாரம் இரு முறை குளிக்கவும்.
ரெடிமேட் பேக்-
ஒரு பிடி கருவேப்பிலையை அரைத்து, அதனுடன் 3 டீ ஸ்பூன் வெந்தையப் பவுடரைக் கலந்து தலைக்கு" பேக்" போட்டு நன்கு காய்ந்ததும், அலசவும்


வாரம் ஒரு முறை குளிக்கவும்.

புதன், ஜனவரி 07, 2009

முதல் சமையல்


ஞாபகம் வருதே; ஞாபகம் வருதே. என் முதல் சமையல் ஞாபகம் வருதே.
எனக்கு பதினாறு வயது. அம்மாவும், அப்பாவும் வெளியூர்
செல்லவேண்டிய சூழ்நிலை. நான் சமையல் செய்ய வேண்டிய சூழ்நிலையும் உருவாக்கப் பட்டது. காலத்தின் கட்டாயம். அன்றுவரை சாப்பிடத் தெரியும்; பிடிக்காத உணவு என்றால் கோவப் பார்வையுடன் எழுந்து போகத் தெரியும். தெரியாதது சமையல் செய்வது. அவ்வப்போது காதால் கேட்டு, கண்ணால் பார்த்தது மட்டுமே என் சமையல் அறிவு. என் செய்வது? களத்தில் இறங்கத் துணிந்து விட்டேன். வேறு வழி?அவர்களும் சென்றுவிட்டார்கள். என் சாமார்த்தியத்தின் மேல் நம்பிக்கை கொண்ட தங்கைகளும்,சிறு தம்பியும் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். நான் .............? அடுப்புடன் போராடிக் கொண்டு இருக்கிறேன். ஆமாம்; பால பாடம்; அடுப்பு பற்ற வைப்பது. கண் கலங்கி, முகத்தில் கரி பூசி, போராடி ஒருவழியாக முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி விட்டேன். பாத்திரத்தை அடுப்பில் வைத்த பின்தான் அடுத்த கட்டத்தின் முக்கியத்துவம் புரிந்தது. எந்த அளவு தண்ணீர் எடுப்பது?இது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியதா? சாதாரண சமையல் தானே............!கை தேர்ந்த சமையல்காரி போல் பாத்திரத்தில் நீர் ஊற்றி விட்டேன். சிறந்த சமையல் நிபுணர்கள் சொல்வதைப் போல் "கண் திட்டத்தில் தண்ணீர்" எடுத்தாகிவிட்டது. அடுத்த கட்டம் சுலபமானதுதான். அரிசியை இரண்டு, மூன்று முறை கழுவி, கல்போக அரித்து [இதுமட்டும் கொஞ்சம் சிரமம்தான்]கொதிக்கும் நீரில் போட்டு விட்டேன். இமய மலையில் பாதி ஏறி விட்ட பெரிமிதம். பெருமையாக,கொஞ்சம் அதட்டலாக "இன்னும் பத்து நிமிஷத்தில் சாதம் ரெடி ஆகிவிடும்;நான் கூப்பிட்டவுடன் சாப்பிட வரணும்". என்று சொல்லிவிட்டு மறுபடியும் களத்திற்கு போய், கரண்டியால் கிளறி விட ஆரம்பித்தேன். அந்த நொடிமுதல் என் சமையலுக்கு சனி பிடித்தது. கிளறுகிறேன் ..........கிளறுகிறேன் ..........கிளறிக்கொண்டேயே இருக்கிறேன். அதற்கு முடிவே வரவில்லை. சாப்பிட தம்பி, தங்கைகள்தான் வந்தார்கள். மறுபடியும் ஒரு அதட்டல்"கூப்பிடும் போது வாங்கள்".மறுபடியும் போராட்டம். நேரம் ஓடிகொண்டே இருக்கிறது. பிள்ளைகள் எட்டி, எட்டி பார்க்கிறார்கள். அம்மா சாதம் வடிப்பதைப் பார்த்த ஞாபகம் வருது. அதை செய்யலாம் என்றால், சாதமும், நீரும் பிரிவனா என்கிறது! ஒன்றோடு ஒன்றாய் கலந்து விட்டன.................!பிள்ளைகளுக்கு செம பசி.சாதமும் நீரும் கலந்த ஒரு கஞ்சி பதத்தில் டம்பளரில் ஊற்றிக் கொடுத்தேன். பிள்ளைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. பசி மயக்கம். வேறு வழி இல்லாமல் அதிலேயே சாம்பார், ரசம், தயிர் கலந்து சாப்பிட்டு மு..........டித்தார்கள். இன்றும் தம்பி [ஒரு அப்பவாகிவிட்டார்] அக்காவின் சமையல் கலாட்டாவைச் சொல்லிச் சிரிக்கிறார்.
நீங்கள் நான் முழுச் சமையலும் செய்தேன் என்று நினைத்தீர்களா? சாதத்தை தவிர மற்ற பதார்த்தங்களை அம்மாவே செய்து வைத்துவிட்டார்கள். நான் சாதம் மட்டுமே செய்தேன். அதற்கே இந்த பாடு பட்டு விட்டேன். எல்லாவற்றையும் நானே செய்திருந்தால் ...................................................................................................................?
இப்போது என் சமையல் நினைவுகளுக்கு ஏன் போனேன் தெரியுமா? நான் இத்தளத்தில் சமையல் செய்முறைகள் எழுதலாம் என்றிருக்கிறேன். அடடா ! ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இப்போது நான் ஓரளவிற்கு நன்றாக சமைக்கிறேன். தன்னடக்கம். ஒ.கே. ருசியான சமையல் குறிப்புகளுடன் மறுபடியும் வருகிறேன்.