திங்கள், டிசம்பர் 06, 2010

குரு பகவான்

நவகிரகங்களில் "நல்ல கிரகம்" எனக் கூறப் படுவார். குரு பார்க்க கோடி நன்மை என்பர்.இந்த குருவருள் இருந்தால் நமக்கு திருவருள் கிடைக்கும்.

நம் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என நால்வரை வரிசைப் படுத்தி வைத்துள்ளனர். குழந்தை பிறந்தவுடன் முதன் முதல் தாயைத் தான் பார்க்கிறது. அதனால் தாயிற்கு முதல் இடம். இவர்தான் உன் தந்தை என தந்தையை தாய் அறிமுகம் செய்து வைப்பதினால் தந்தைக்கு இரெண்டாம் இடம். பிறகு தாய்,தந்தை தங்கள் குழந்தைக்கு நல்ல அறிவு, ஆற்றல் வளரச் செய்ய சிறந்த ஆசிரியரிடம் சேர்ப்பதினால் குருவுக்கு மூன்றாவது இடம். அந்த குருவானவர் , குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுக்கும் போது இதுதான் தெய்வம் ; இதை வழிபட்டால் நமது வாழ்க்கை ஒளிமயமாக அமையும் என்று நல்வழிப்படுத்துவதால் தெய்வத்திற்கு நான்காவது இடம்.

குருவை நாம் கோவிலுக்கு சென்று வழிபடும்போது அதன் பார்வை நம் மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

சனியை சாய்வாய் நின்று கும்பிடு. குருவை நேராய் நின்று கும்பிடு "என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருவின் சந்நிதியில் நேராய் நின்று வழிபட்டால் பொன்னும், பொருளும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.வியாழக்கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் உள்ள குருவையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம். நமது முன்னோர்களை நினைத்து வீட்டில் வியாழக்கிழமைகளில் வழிபடலாம்.

திருமணம் ஆக வேண்டியவர்கள் சுண்டல் மாலை சாத்தலாம். மற்ற கோரிக்கை உடையவர்கள் சுண்டலை தானமாகவும், நைவேத்தியமாகவும் கொடுக்கலாம்.
குருவுக்குரிய ஸ்தலங்கள்__

திருச்செந்தூர்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி

சுருட்டப்பள்ளி

குருவித்துறை

தக்கோலம்

திருமறைக்காடு

புளியறை
திருவெற்றியூர்
சூரியனார் கோவில்
இந்த ஆலயங்களுக்குச் சென்றும் குரு பகவானை வழிபட்டு அருள் பெறலாம்.நவரத்தினங்களில் கனக புஷ்பராகமும், மலரில் முல்லையும், நிறத்தில் மஞ்சளும், மரத்தில் அரசும், வாகனத்தில் யானையும், உலோகத்தில் தங்கமும், உணவில் தயிர் சாதமும், தானியத்தில் சுண்டலும் விரும்பி ஏற்பவர் குருபகவான். வியாழன்தோறும் விரதம் இருந்து குருவுக்கு விருப்பமானவைகளை அர்ப்பணித்து வணங்கி அவர் அருள் பெறுவோமாக.

குருபகவான் கவசமான "வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே" என்ற பதிகத்தை தினமும் மூன்று முறை படித்தால் நன்மை உண்டாகும்.

கருத்துகள் இல்லை: