வியாழன், டிசம்பர் 16, 2010

மார்கழியின் சிறப்பு


திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள். மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த விரதம் அமைந்தது. இந்த விரதத்தை இப்போதும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம். காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். உதாரணமாக, மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.
மார்கழி நைவேத்யம்
மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களிலுமே அதிகாலையில் பூஜை நடக்கும். கோயில்களில் மட்டுமின்றி வீட்டையும் சுத்தம் செய்து, காலை 8.30 மணிக்குள் எளிய பூஜை ஒன்றை பெண்கள் செய்யலாம். திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும். திருவிளக்கேற்றி, நம் இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த பாடல்களை பாட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் முதலானவை செய்வதற்கு எளியவையே. கற்கண்டு சாதம் அமுதம் போல் இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். கன்னிப்பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் முதலானவற்றை நைவேத்யம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை: