வியாழன், டிசம்பர் 16, 2010

சூடிக் கொடுத்த கோதை

அது திரேதா யுகம். மிதிலை நகரை சிறப்புற ஆண்டு வந்தான் ஜனக மகாராஜன். கர்மத்தாலேயே சித்தியடைந்தவன் என்று ஜனக மன்னனைச் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட ஜனக மன்னன், யாகசாலை ஒன்று அமைப்பதற்காக கலப்பை கொண்டு பூமியை உழுதான். யாகசாலைக்காக நிலமகளைக் கீறி வந்த அப்போது, அந்தக் கலப்பையின் படைச் சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமாக ஒரு மகள் தோன்றினாள். அவளை ஜனகன் தன் மகளாகப் பாவித்து, சீதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். மணப் பருவம் எய்திய அம்மகளை அயோத்தி மன்னன் தசரதனின் குமாரனாக அவதாரம் செய்த திருமகள்நாதன் ராமபிரான் மணந்து கொண்டான். மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தான். ஸ்ரீதேவி புவியில் தோன்றி, புவியிலுள்ள மறச் செய்திகள் மறையவும், அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேண்டியே, திருமாலின் அவதாரமாகிய ராமனுக்குத் துணைவியானாள்.
அதேபோல் இது கலி யுகம். தென்பாண்டி நாட்டைச் சேர்ந்த வில்லிபுத்தூரில் சிறப்புறத் திகழ்ந்துவந்தார் பட்டர்பிரான். அவருக்கு பெரியாழ்வார் என்றும் பெயருண்டு. பக்தியாலே சித்தியடைந்தவர் என்ற சிறப்பு அவருக்கு உண்டு. அவர் அங்கே கோயில் கொண்டிலங்கும் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலையும் பாமாலையும் ஒருங்கே சமர்ப்பித்து பக்தி யாகம் செய்து வருபவர். அவருடைய வேள்விச் சாலை, அவர் அமைத்திருந்த நந்தவனம்தான். அந்த நந்தவனத்தில் ஒரு நாள் அவர் துளசி தளங்களைப் பறித்தவாறே வருகையில், அதன் அடியில் ஒரு குழந்தை மலர்ந்து சிரிப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து தன் மகள் போலே வளர்த்து வந்தார். கோதை என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. பூமாதேவியே இவ்வுலக மக்களை நன்னெறிப்படுத்துவதற்காக சீதையைப் போலே மீண்டும் கோதையாக அவதரித்தாள். அவளுடைய அந்தரங்க பக்தியெல்லாம் அந்த அரங்கன் மேலேயே இருந்தது.
இப்படி ஆண்டாள் பிறந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டது, ஆடிப் பூர நன்னாள். இதனாலேயே அந்த ஆடிப்பூரம் மிகுந்த சிறப்பும் சீர்மையும் பெற்றது. இதை மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் இப்படிச் சொல்கிறார்....
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.
- என்றும்,
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.
- என்றும் பாடிப் போற்றுகிறார்.
இப்படி அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாக அவதரித்த ஆண்டாள், சிறுவயது முதலே, தம் தந்தையாரான பெரியாழ்வாரிடம் இருந்து பக்திச் சிறப்பையும் கவிச் சிறப்பையும் கற்று வளர்ந்தார். அதிலே கிருஷ்ணனைப் பற்றியும், அவனுடைய லீலைகளைப் பற்றியும் அவர் சொல்லும் கதைகள் அவளுடைய உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. அதில் கிருஷ்ணனின் பால லீலைகள் அவளுடைய மனத்தைக் கவர்ந்தன. எந்நேரமும் குழந்தை கிருஷ்ணன் தன்னிடம் விளையாட வருவது போலவும், அவன் தன்னுடனேயே இருப்பது போலவும் அவள் எண்ணிக் கொண்டாள். சிறுமியான கோதைக்கு, அந்தக் கண்ணன் அவள் உள்ளம் திருடிய கள்வனாகத் தெரிந்தான்.
தந்தை முதலியோர் கண்டு வியக்கும்படி, இளமை முதலே எம்பெருமான் பக்கலில் பக்திப் பெருவேட்கை கொண்டிருந்தாள் கோதை. சிறுவயது முதல் தன்னுடன் மனத்தால் விளையாடி எப்போதும் தன்னுடனேயே இருந்து வந்த அந்தக் கண்ணனையே தாம் மணம் செய்துகொள்வதாகக் கருதினாள். அப்படி, அவனது பெருமைகளையே எப்போதும் சிந்தித்து, துதித்து வாழ்ந்து வந்தாள் கோதை நாச்சியார்.
பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலை கட்டி அழகு பார்க்கும் நந்தவனக் கைங்கர்யத்தையே வேள்வியாகச் செய்துவந்தார் அல்லவா? அப்படி அழகாகப் பூத்துக் குலுங்கும் பூக்களை அரங்கனுக்குப் படைப்பதற்காக மாலை கட்டிச் செல்வார். அவ்வமயம், இவருடைய மூக்கினால் அந்தப் பூக்களின் வாசனையை அறியாமல் நுகர்ந்துவிடும் வாய்ப்பும் இருந்தது. அப்படி, தான் நுகர்ந்து பார்த்த பூவின் வாசனையையா அந்த அரங்கனும் நுகர்வது என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றியது. தன் எச்சில் அந்தப் பூக்களில் படாதவண்ணம் இருக்க முகத்திலே மூக்கை மறைத்தாற்போல் துணியைக் கட்டிக் கொண்டு அந்தப் பூக்களைப் பறித்து மாலை கட்டுவாராம். அவ்வளவு தூரம் அரங்கனுக்குப் படைக்கும் பூவில் தூய்மையைக் கடைப்பிடித்த பெரியாழ்வாருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
இங்கே பெரியாழ்வார் கட்டி வைத்த மாலைகளையே கண்கொட்டாமல் பார்த்துவந்த கோதைக்கு, அதன் அழகும் கம்பீரமும் பெரிதும் கவர்ந்தன. அதைக்காட்டிலும், இந்தப் பூவைச் சூடிக்கொள்ளும் அரங்கன் என்ன அழகாகத் தோற்றமளிப்பான் என்கிற எண்ணமும் அவள் மனத்தே உதித்தது. புத்தம் புதிதாகப் பூத்த பூக்களின் புதுமை வாடிவிடுவதற்குள்ளே அதே மணத்தோடு அதை அழகு பார்க்க விரும்பினாள். தன்னையே அந்த அரங்கனாக உருவகப்படுத்திக் கொண்டாள்.
அவளுள் இப்போது அரங்கன். தூய்மை போற்றிய பெரியாழ்வாரின் அந்தப் பூக்குடலையிலிருந்து பூமாலையைக் கையில் எடுத்தாள். தன் கழுத்தில் சூடி இப்போது அதன் அழகை ரசித்தாள். கண்ணாடி எதிரே இருந்தது. அதன் அருகில் சென்றாள். அந்தக் கண்ணாடி முன்னே மாலை சூடிய வண்ணமாய் அவள் நின்றிருந்தாள். ஆனால் அந்தக் கண்ணாடியிலோ அரங்கன் மாலை சூடி அவளுடன் கள்ளச் சிரிப்பு பூத்தவனாய்த் தோற்றமளித்தான். பின்னர் அந்த மாலையை அப்படியே கழற்றி, பெரியாழ்வார் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் அந்தப் பூக்குடலையினுள் வைத்துவிடுவாள்.
நாள்தோறும் இந்த நாடகம் நடந்து வந்தது. கோதை சூடிக் களைந்த மாலைகளை அரங்கனும் மிகுந்த உவப்போடு சூடி வந்தான். பெரியாழ்வாரும் வழக்கம்போலவே தன் பணியைச் செய்து கொண்டிருந்தார்....
ஒரு நாள்.... பெரியாழ்வார் பூக்குடலை ஏந்தி அரங்கன் சன்னிதிக்குச் சென்றார். பூக்குடலையிலிருந்து மாலையை வெளியே எடுத்தார். மாலையைப் பார்த்த அக்கணம் அவருக்கு மனத்தில் தூக்கிவாரிப் போட்டது. காரணம் அந்த மாலையில் நீளமான தலைமுடி ஒன்று அவர் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. அவ்வளவுதான் துக்கம் மேலிட இல்லத்துக்கு ஓடினார். இவ்வளவு தூய்மையாக இருந்தும் எப்படி இத் தலைமுடி அரங்கன் சூடும் மாலையில் வந்தது?
மறுநாள் அவருக்கு விடை கிடைத்துவிட்டது. அவரின் பெண்பிள்ளை கோதை, அரங்கனுக்கு வைத்த மாலையைத் தான் சூடி, பின் அரங்கன் சூடுவதற்காக பூக்குடலையில் வைத்ததை பின்னிருந்து கண்டுகொண்டார். அடுத்த கணம், எல்லையில்லாக் கோபம் அவருக்கு மூண்டது. தன் செல்ல மகள் கோதையை கோப வார்த்தைகளால் கடிந்து கொண்டார். அவ்வளவுதான்! அன்று அரங்கனின் அலங்காரத்துக்காக அவனுக்கு அணிவிக்கவேண்டிய மாலைகள் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன.
பொழுது அப்படியே சென்றது. இரவும் வந்தது. துயரத்தின் உச்சத்தில் உறங்கிப் போனார் பெரியாழ்வார். கனவிலே காட்சி தந்தான் அரங்கன். தமக்கு மாலை வராத காரணத்தைக் கேட்டான். ஆழ்வாரும், தன் செல்ல மகளின் சிறுமைச் செய்கையைச் சொல்லி ஆறாத்துயர் கொண்டார். அரங்கன் அவரைத் தேற்றினான். நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே தமக்கு மிகவும் உகப்பானது என்பதைச் சொல்லி, கோதை நாச்சியாரின் பிறப்பினைப் புரியவைத்தார்.
கனவு நீங்கி, காலை கண்விழித்த ஆழ்வாருக்கு உண்மை புரிந்தது. செல்லப் பெண்ணைக் கோபித்ததற்காக வருத்தப்பட்ட ஆழ்வார், மறுநாள் பூத்தொடுத்து அந்த மாலைகளை கேட்காமலேயே அவள் கையில் கொடுத்து அணியச் சொன்னார். பின்னர் அதை வாங்கிக்கொண்டு அரங்கனின் சந்நிதி நோக்கி விரைந்தார். தந்தையின் செயலால் விழி அகல விரித்து விசித்திரப் பார்வையோடு நின்றிந்தாள் கோதை.
விஷ்ணுசித்தர் தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கண்டார். அவளுக்கு, ஆண்டாள் என்றும், மாதவனுக்குரிய மலர் மாலையைத் தாம் சூடிப் பார்த்து, பின்பு அரங்கனுக்குக் கொடுத்தது காரணமாக, சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் பெயரிட்டு அழைத்துவந்தார்.
நாட்கள் சென்றன. இறை அறிவும் பக்தியும் உடன் வளர்த்து வந்த ஆண்டாள், தமக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் மேல் விருப்பம் மிகக் கொண்டவளானாள். அவன் மீதான காதல் அதிகரித்தது. இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் பிரிந்திருக்க முடியாது என்னும் கருத்துடன், கண்ணனுடைய பிரிவை ஆற்றாத ஆயர் மங்கையர் போலத் தாமும் நோன்பு நோற்று உயிர் தரிக்க மாட்டாதிருந்தாள். இத்தகைய தன் எண்ணத்தை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற திவ்வியப் பிரபந்தங்களின் மூலமாக அந்தக் கண்ணனிடத்தே விண்ணப்பம் செய்து வந்தாள்.மணப் பருவத்தே வந்து நின்ற இந்தப் பெண்ணைப் பார்த்து, தந்தையாரான பெரியாழ்வார் அவளுடைய மண வினை பற்றி பேசத் தொடங்கினார். ஆண்டாளோ, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று உறுதியாக உரைத்தாள்.அவ்வளவில் பட்டர்பிரான், பின் என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும், யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன் என்றுரைத்தாள்.
பின்னர் கோதை, தம் தந்தையாகிய பட்டர்பிரானிடம், நூற்றெட்டுத் திருப்பதிகளிலும் எழுந்தருளி சேவை சாதிக்கும் இறைவனின் பெருமைகளை விளங்க எடுத்துக் கூறியருள வேண்டும் என்று வேண்டினாள். அவரும் அவ்வாறே விரித்துக் கூறி வந்தார். அப்படிக் கேட்டு வருகையில், வடமதுரையில் எழுந்தருளும் கண்ணபிரானது வரலாற்றைக் கேட்ட அவ்வளவிலே மயிர் சிலிர்ப்பும், திருவேங்கடமுடையானது பெருமையை செவிமடுத்தபோது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலை மலையழகரின் வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மனமகிழ்ச்சியும் பெற்றாள்.
அடுத்து திருவரங்கன் பெருமை செவியில் பட்ட அம்மாத்திரமே அளவற்ற இன்பம் மனத்தே அலைமோத நின்றாள். அவர்களுள் அரங்கநாதனிடம் மனத்தைச் செலுத்தி, அவனுக்கே தம்மை மணமகளாக நிச்சயித்து, அவனையே எண்ணியிருந்தாள் கோதை.
கோதை நாச்சியார் தம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்ள எண்ணி வில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், அப்பதியிலிருந்த பெண்களையும் தம்மையும் ஆயர்குல மங்கையராகவும், வடபெருங்கோயிலை நந்தகோபன் மனையாகவும், அப்பெருமானைக் கண்ணனாகவும் கருதி, திருப்பாவையைப் பாடியருளினாள். அதன் தொடர்ச்சியாக பின் பதினான்கு திருமொழிகளைப் பாடினார். இதற்கு நாச்சியார் திருமொழி என்று பெயர் ஏற்பட்டது.
கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய ஆழ்வாரும், நம்பெருமாள் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ? என்று எண்ணியவாறு இருந்தார். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி, நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம் என்று திருவாய் மலர்ந்தருளினான். அதே நேரம், கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, நீவிர் குடை, கவரி, வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் சென்று, பட்டர்பிரானுடன் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக என்று பணித்தான். மேலும் பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினான்.
மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். கோயில் பரிவார மாந்தரும் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கப் பிரான் காட்சி அளித்துச் சொன்ன செய்திகளை அறிவித்தனர்.
பட்டர்பிரான் இறைவனது அன்பை வியந்து போற்றினார். பின்னர் மறையவர் பலர் புண்ணிய நதிகளிலிருந்தும் நீர் கொண்டு வந்தார்கள். கோதையின் தோழிகள் அந்நீரினால் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தி, பலவாறு ஒப்பனை செய்தனர். தோழியர் புடைசூழ கோதை தமக்கென அமைந்த பல்லக்கில் ஏறினார். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.
இப்படி எல்லோரும் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்தே, பலரும், ஆண்டாள் வந்தாள்! சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்! கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! பட்டர்பிரான் புதல்வி வந்தாள்! வேயர் குல விளக்கு வந்தாள்! என்று அந்தப் பல்லக்கின் முன்னே கட்டியம் கூறிச் சென்றனர். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.
பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுதற்காகத் தவமாய்த் தவமிருந்த அந்தப் பெருமாளைக் கண் குளிரக் கண்டாள். அகிலத்தையே வசீகரிக்கும் அந்த அரங்கனின் அழகு, ஆண்டாளைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே! சூடிக்கொடுத்த நாச்சியாரின் சிலம்பு ஆர்த்தது. சீரார் வளையொலித்தது. கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை நடந்து அரங்கன் அருகில் சென்றாள். அமரரும் காணுதற்கு அரிய அரங்கனின் அருங்கண்ணைக் கண்ட அந்நொடியில், அவள் இன்பக் கடலில் ஆழ்ந்தாள். உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையில், அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. சீதாபிராட்டியாகத் தான் கொடுஞ்சிறையில் தவித்தபோது, இந்த ராமன்தானே தனக்காக கல்லும் முள்ளும் பாதங்களில் தைக்க, கால் நோக நடந்து வந்து நம்மை மீட்டான். அவன் இப்போது சயனித்திருக்கிறான். அவன் கால் நோவு போக்க நாம் அவன் திருவடியை வருடி, கைமாறு செய்வோமே எனக் கருதினாள். அவனைச் சுற்றியிருந்த நாகபரியங்கத்தை மிதித்தேறினாள். நம்பெருமான் திருமேனியில் ஒன்றிப் போன அப்போதே அவள் அவன்கண் மறைந்து போனாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.
காணுதற்கரிய இக்காட்சி கண்டு பிரமித்துப் போய் இருந்தார்கள் ஆழ்வாரும் மற்றவர்களும். அரங்கன் ஆட்கொண்ட அந்த ஆண்டாள் அரங்கனையே ஆண்ட அதிசயத்தைக் கண்டு எல்லோரும் பக்திப் பரவசத்தில் திளைத்திருந்தனர். அவர்களின் வியப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் திருவரங்கன் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகில் அழைத்தான். கடல் மன்னனைப் போல் நீரும் நமக்கு மாமனாராகிவிட்டீர் என்று முகமன் கூறி, தீர்த்தம், திருப்பரிவட்டம், மாலை, திருச்சடகோபம் முதலியன வழங்கச் செய்தான்.
எல்லாம் பெற்றுக்கொண்டு, சொன்னவண்ணம் தன் மகளை ஏற்றுக்கொண்ட மகிழ்வில் பெரியாழ்வாரும் வில்லிபுத்தூர் திரும்பினார். முன் போல இறைவனுக்கு நந்தவனக் கைங்கர்யம் கைக்கொண்டு, எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்து, இறைமையின் இருப்பிடம் அடைந்தார்.

திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் கொண்டு வரப்பட்டு திருப்பதி ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.. --பிரபந்தம்

கருத்துகள் இல்லை: