சனி, நவம்பர் 27, 2010

அதிசயம்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன் என செடி கொடிகள் இடத்தும் கருணை கொண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார். பார்வைக்கு எளியவர்; வெள்ளாடை அணிந்தவர்; அற்புதமான பாடல்களைப் பாடியவர். திருவருட்பா எனும் அருமையான நூலை ஆக்கியவர்.

ஒரு முறை வள்ளலார் ஒரு சாலை வழியே நடந்து சென்று கொண்டு இருந்தார். ஆடு ஒன்று அப்போது தான் குட்டி ஒன்றை ஈன்றிருந்தது. குட்டியோ முழுமையாக எழுந்திரிக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி கிழே விழுந்தது. தாய் ஆடு தனது குட்டியை சுற்றிச் சுற்றி வந்தது. இந்த காட்சியை வள்ளலார் பார்த்தார்.கூர்ந்து கவனித்த போது குட்டியின் ஒரு கால் ஊனம் என்று அறிந்தார். வாடிய பயிரை கண்ட போது கண்ணீர் சிந்தியவர் அல்லவா?தாய் ஆட்டின் துக்கத்தைப் பார்த்து வருந்தினார். ஊனத்தை எப்படி போக்குவது என்று சிந்தித்து அதற்கான முயற்சியில் இறங்கினார்.

அருகில் இருந்த வீட்டுத் திண்ணையில் காவி ஆடையில் ,கையில் ஒரு தடியுடன் "முரட்டுச் சாமியார் "என அழைக்கப்படும் துறவி ஒருவர் அமர்ந்து இருந்தார். குட்டியின் ஊனத்தைப் போக்க அதை எடுத்து தன் மடியில் வைத்து இருக்கும் வள்ளலாரைப் பார்த்தார்.பின் அவரிடம் சாமியார் "தடவி கொடுத்தால் குட்டியின் ஊனம் சரியாகி விடுமா?எனக் கேட்டார்.
அவரது கேள்வி வள்ளலார் காதிலும் விழுந்தது. ஆனால் அவர், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. குட்டியின் துயரத்தைப் போக்குவதிலேயே கவனமாக இருந்தார்.
"எல்லாம் வல்ல இறைவன் நினைத்தால் நடக்காதது எதுவும் இல்லை; உலகில் உள்ள எல்லா உயிர்களையும் காப்பாற்றும் ஈசன் இந்த ஆட்டுக் குட்டியின் துயரத்தையும் போக்குவான்" என்று கூறியபடியே இறைவனிடம் மனம் உருக வேண்டினார். உருக்கமாக ஒரு பாடலையும் பாடினார்; ஊனம் உற்ற காலையும் பரிவுடன் தடவிக் கொடுத்தார். சிறிது நேரத்திலேயே அந்த அதிசயம் நடந்தது.
அதுவரை எழுந்து நிற்க முடியாமல் தடுமாறிய குட்டி சட்டென நிமிர்ந்து எழுந்தது. அதை தனது மடியில்இருந்து வள்ளலார் இறக்கி விட்டார்.
அடுத்த நொடியே தாய் ஆட்டின் மடியில் பால் குடித்து மகிழ்ந்தது குட்டி. அங்கும், இங்கும் துள்ளிக் குதித்து ஓடியது. இதை கண்ட வள்ளலாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இறைவனின் எல்லையில்லா கருணையை எண்ணி வணங்கினார். சாமியாருக்கோ இன்ப அதிர்ச்சி!!!!!

கருத்துகள் இல்லை: