வியாழன், நவம்பர் 25, 2010

கோளறு பதிகம்

பதினொன்றாவது பாடல்

தேனமர் பொழில்கொள் ஆலை
விளைச்செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதி யாய
பிரமா புரத்து
மறைஞான ஞானி முனிவன்
தானுறகோளும் நாளும்
அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும்
அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

பொருள்-
தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகளும், கரும்பின் ஆலைகளும், செந்நெற் பயிர்களும் நிறைந்து இந்த வளங்களால் மிகுந்த பொன்வளம் எங்கும் சிறக்கும். நான்முகன் முதற்கண் பூசித்து வழிப்பட்ட பிரமாபுரம் என்னும், சீர்காழியில் அவதரித்த வைதீக ஞானத்தை உடைய திருஞான சம்பந்தன், கோள்களும், நாள்களும் தொண்டர்களை வருத்தாதவாறு உரைத்த சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதுகின்ற அடியவர்கள் மேலுலகத்தில் அரசராக ஆளக்கடவர்கள். இது நமது ஆணை ஆகும்.

கருத்துகள் இல்லை: