சனி, டிசம்பர் 13, 2008

கவிதை

அடே, அசட்டு தசரதா!
உன் அருமை ராமனை
பதினாலு வருடம் பிரிந்ததற்கே
அவசரப்பட்டு உயிரை விட்டாயே!
நாங்கள் எல்லாம்
நவீன தசரதர்கள்!
நடுத்தர வர்க்கத்திலேயே
நாளும் நீச்சல் போட்டு,
நெஞ்சு நிறைய ஆசையுடன்
வங்கிக் கடனுடன் - எங்கள்
கண்மணிகளின் கல்வியைக்
கச்சிதமாய் முடித்து விட்டு
"அக்கடா" என நிமிர்ந்தால்
கம்ப்யூட்டர் படித்த எங்கள்
கண்மணி ராமன்கள்
கை நிறைய காசுடன்
அமெரிக்க வாழ்வுக்கு
அடிமையாகி விட்டார்கள்!
இருவருட இடைவெளியில் - ஏதோ
எட்டிப் பார்க்கும் மகனை- அவனது
அரைக்கால் டிராயரிலும்
அமெரிக்கப் பேச்சிலும் -எங்களுக்கு
அடையாளம் கூடத் தெரிவதில்லை
பதினாலு வருடப் பிரிவிற்கே
புத்திர சோகம் என்று
புலம்பித் தள்ளினாயே!
முதுமை முழுவதும் தனிமையுடன்
முகம் தெரியா வியாதிகளுடன்
முட்களின் மேல்
நாட்களை நகர்த்தும்
எங்களைக் கண்டிருந்தால்
ஒரு வேளை நீயும்
உயிரை விட்டிருக்க மாட்டாயோ ............?

1 கருத்து:

HEMA சொன்னது…

very good kavithai u are lucky compare to us.....my son is an US citizen...so surely his father is a modern dasarathan....