புதன், ஆகஸ்ட் 24, 2011

கிருஷ்ண ஜெயந்தி

வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு
கிருஷ்ணராக அவதரித்தார்.
"எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ
அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்'
என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது
பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும்,
நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும்,
காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும்
நமக்கு விருப்பமான முறையில்   
எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி
கிருஷ்ணரை அடையலாம்.
கிருஷ்ணலீலையைக் கேட்டால்
பசி, தாகம் போன்ற உலகியல் விஷயங்கள்
நமக்கு தோன்றாது.
மதுரமான கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன்
புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய
கண்கள் தாமரை மலர் போல மலர்ந்துள்ளன.
வசீகரமான மயில் இறகு தலையில் அசைய
கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்ததுபோல
நம் உள்ளத்தை மயக்குகிறார்.
கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர்,
நமக்கு மழை போல் அருளை வாரி வழங்குகிறார்.

வரலாறு
தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும்
பிறக்கும் 8வது குழந்தையால் தனக்கு மரணம் நிகழும்
என்று அசரீரி மூலம் அறியும் கம்சன், அச்சமுறுகிறான்.
உடனே தேவகியையும், வாசுதேவரையும் சிறையில் அடைத்து
தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.
இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் அழித்த பின்,
8வது முறையாக தேவகி கர்ப்பமுற்றாள்.
இந்தக் குழந்தையையும் அழிக்க முடிவு செய்து,
குழந்தை பிறக்கும் வரை காத்திருந்தான் கம்சன்.
அதே நேரம் வாசுதேவரின் நண்பர்
நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பமுறுகிறாள்.
ஆவணி மாதம் அஷ்டமி திதி,
ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு கிருஷ்ணர் பிறந்தார்.
அதே நாளன்று யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி,
இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில்
கொண்டு சென்று சேர்த்துவிடுமாறும்,
அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை
இங்கே கொண்டு வந்துவிடுமாறும் வாசுதேவருக்கு கட்டளையிட்டார்.
வாசுதேவரும் கிருஷ்ணரை கூடையில் சுமந்து சென்று
அங்கு வைத்து விட்டு, பெண் குழந்தையை கொண்டு வந்து விட்டார்.
கம்சன் கொல்ல வரும் போது, அந்தக் குழந்தை காளி தேவியாக மாறி,
அவனை எச்சரித்து விட்டு மறைந்தது.
யசோதாவிடம் இருக்கும் குழந்தைக்கு
கிருஷ்ணர் என்று பெயரிட்டு
கோகுலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடினர்.
அனைத்து வீடுகளிலும் கிருஷ்ணன் காலடி பட வேண்டும் என்பதால்,
அவனுக்கு பிடித்த பண்டங்களை
வீட்டினுள் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் கோகுலவாசிகள்.
இந்த கொண்டாட்டங்களின் போது
மேற்கொண்டதாக கூறப்படும் சடங்குகள்
இன்றும் பின்பற்றப்படுகின்றன.
கிருஷ்ணரை வழிபடும் முறை

பொதுவாக கிருஷ்ணருக்கு விருப்பமான பலகாரங்கள்,
வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து,
கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் பின்பற்றப்படுகிறது.
பல்வேறு பழங்கள், அவல், வெண்ணெய், நாட்டுச்சர்க்கரை,
பூக்கள், அப்பம், தட்டை, வெல்லச் சீடை,
உப்புச் சீடை, முள்ளு முறுக்கு, தோயம் என்று
கிருஷ்ணருக்கு பிடித்த பட்சணங்களைப் படைத்து
அவரை வீட்டுக்குள் அழைத்து
அருள் பெறுவதே இந்தப் பண்டிகையின் சாராம்சம்.

கருத்துகள் இல்லை: