புதன், ஆகஸ்ட் 10, 2011

ஆடி அமாவாசை.

மனிதர்களாகிய நாம் பெற்றகடன்கள் பலவாகும்.

அவற்றுள் மூன்று கடன்கள் பெரும் கடன்களாக கருதப்படுகிறது.

அவையாவன தேவர்கடன், முனிவர்கடன், பிதிர்க்கடன் என்பவையாகும்.

தேவர்கடன் இறைவனை வழிபடுவதாலும்,

முனிவர்கடன் வேதம் ஓதுதலாலும்,

திருமுறை பாராயணம் (தேவாரம் திருவாசகம்) பாடுவதாலும்,

பிதிர்க்கடன் இறந்த ஆத்மாக்களை நினைந்து

எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தல் மூலமாகவும்

இக்கடன்கள் தீர்க்கப்படுகின்றன.
நீத்தார்கடன் எனப்படும் பிதிர்க்கடனை தீர்க்கவும்,

இக்கடமையை செய்ய ஏற்ற நாளாககவும் வருவது

இந்த ஆடி அமாவாசை தினமாகும்.

ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை –

மண்ணுலகை விட்டு விண்ணுலகெய்தி

சிவபதம் அடைந்த சகல ஆத்மாக்களுக்கும் செய்யப்படும் பூஜை ஆகும்.

அப்பா அம்மா உறவுகள் என அனைவர்க்கும்

நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள்

சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாதவர்கள்

இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில்

தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர் கடன் செய்ய முடியாதவர்கள்

இந்த ஆடிஅமாவாசை நாளில்

ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.

அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும்

முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து

அவர்கள் நற்கதியடைய அவர்களின்

பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும்.

ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன.
இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள்
ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும்
அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித்

தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும்

பிண்டதானம், சிரார்த்தம் செய்தும்

இறைவனை வழிபட்டும்

அந்தணர்களுக்குத் தானமும்,

விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர்

ஆகியோருக்கு உணவும் அளித்தும்

அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.

சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும்,
ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும்
சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.

அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள்

ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும்

சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும்

சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர்.

தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம்.

ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்பர்.

தட்சணாயனதொடக்க மாதம் ஆடி என்பதால்

பிதுர் காரியங்களுக்கு ஆடி மாதம் சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி

பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம்

என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

ஆடி அமாவாசைத் தினத்தில்

கடல், நதி, ஆறு, வாவி போன்ற தீர்த்தங்களில் நீராடினால்

பல வினைகள் அறும் என்றும்

பாவங்கள் நீங்கும் என்றும் கூறுவர்.

தீர்த்தங்களை இறைவனின் அருள் குறித்த நீராக நினைத்து

முன்னோர்களான பிதுர்களை எண்ணி

அவர்களின் பாவங்களை நோக்கி

அவர்களுக்கு முத்தி அளிக்கும் படி

இறைவனை வேண்டி தீர்த்தமாடுதல் வேண்டும்.

சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்க கூடிய நாளாகிய

இவ் அமாவாசை திகதியன்று

காலையில் கடலில் நதியில் ஆற்றில் மூழ்கி குளித்து

அல்லது வீடுகளில் குளித்து

சுத்தமான ஆடை அணிந்து

விபூதி பூசி பொட்டு வைத்து

ஆலயம் சென்று சிவன் தரிசனம் செய்து

ஆலய குருவின் வழிகாட்டலில்

முதலில் தர்ப்பை கையில் அணிந்து சங்கல்பம் செய்து

அமரத்துவம் அடைந்தவர்கள் பெயர்நாமங்களை

குருவிடம் சொல்ல வேண்டும்.

இறந்த தாய் தந்தையர் அவர்கள் பெயர்களை முதலில் சொல்லி

பின்பு தாத்தா பாட்டி தலைமுறை சொல்லி

அதன் பின் ஏனைய உறவினர் நன்பர்கள்

இறந்திருந்தால் அவர்கள் பெயர்களும் சொல்லி

எள்ளும் தண்ணீரும் சேர்த்து இறைத்து

தர்ப்பணம் செய்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய

பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அதன்பின் மோட்சதீபம் ஏற்றி
இறைவனை வழிபட்டு அர்ச்சனை செய்து ஆராதிக்க வேண்டும்.


எள்ளு நீருடன் தர்ப்பைப்புல் நுனியால் இறைத்து விடுவதால்

பிதிர்கள் திருப்தி அடைவார்கள்.

தர்ப்பணம் என்பது திருப்திப்படுத்துதல் என்று பொருள் படும்.

பகவான் விஸ்னுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும்

சகல பாபங்களையும் தீர்க்க வல்லதும் ஆகிய எள்ளும்,

தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு

தர்ப்பணம் செய்து பிதிரின் ஆசியையும்

குருவின் ஆசியையும் பெற வேண்டும்.

பின் குருவிற்கு தானம் வேட்டிசால்வை

அரிசி காய்கறி குரு தட்சனை வழங்கி ஆசிர்வாதம் பெறவேண்டும்.

வீட்டில் அமரர்கள் படத்தின் முன்பு

சைவமாக சமைத்து வாழை இலை உணவு படைத்து

கற்பூர ஆராதனை செய்து வணங்கி

உறவினருடன் கூடி மதியபோஷனம் உண்ணவேண்டும்.




கருத்துகள் இல்லை: