சனி, ஜனவரி 19, 2013

ஒரு வரப்பிரசாதம்.


லகச் சந்தையில் இந்திய மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை  அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.



''நான் கண்டுபிடித்துள்ள 'எகோ ஃப்ரீ கேப்’ பார்க்க ரிக் ஷாவின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம். சூரிய சக்தி, பேட்டரி, மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளைப் பெடல் செய்வதுபோல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்த வண்டியை வடிவமைத்ததும் இதை முதல்முதலில் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேத்தியும் உதயநிதி ஸ்டாலினும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தார்கள். உதயநிதி சார் ஓட்டிப் பார்த்ததும் அசந்துவிட்டார். உடனே  'எனக்கு ஒண்ணு பண்ணிக் கொடுங்கப்பா... பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகலை’னு ஜாலியா கமென்ட் அடித்தார்.
இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை. ஒன்று, சார்ஜ் ஏறவில்லை. அல்லது சார்ஜ் ஏறினால் அது வண்டியின் ஓட்டத்துக்குப் பயன்படவில்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை.  ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், லட்சக்கணக்கில் பணம் செலவானது. ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன். இது மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக ஒரு லட்சம் இருக்கும். ஆனால், பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது.

என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக டிரைவர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள். பெட்ரோல் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன்.
இவருடைய இன்னொரு ஐடியா பெங்களூரில் இப்போது செம ஹிட். பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டானwww.earnwhileyoudrive.in-ல் கார் உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக  வைத்துக் கொள்ளலாம். இந்த விளம்பரங்களும் 'எகோ ஃப்ரி பெயின்ட்டிங்'கில் செய்யப்படுவதால் காரின் கதவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. கார் உரிமையாளர் விரும்பும்போது விளம்பரத்தை காரின் கதவுகளுக்குப் பாதிப்பு இல்லாமல் அகற்றிக் கொள்ளலாம். காரின் உரிமையாளருக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையும் கிடைக்கிறது. பெங்களூரில் இவருடைய கான்செப்டைப் பின்பற்றி பஸ்களும் நிறைய ஓடுகின்றனவாம்.
யப்பா... சீக்கிரமா இங்கேயும் இந்த கான்செப்டைக்கொண்டு வாங்கப்பா. நிறையப்  பேர் கார் தவணைத் தொகை கட்ட முடியாம கஷ்டப்படுறாங்க!

கருத்துகள் இல்லை: