வெள்ளி, ஜூன் 10, 2011

தமிழ் மாதங்களின் பெயர்க் காரணம்

தமிழ் மாதங்களுக்குரிய பெயர் காரணம் புதிது.

 தமிழ் மாதங்களுக்கான பெயர்க் காரணம் குறித்து பார்க்கலாம்.முன் காலத்தில் தமிழர்களுடைய வாழ்வு விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டு இருந்தது.விவசாய நிகழ்வுகளை ஒட்டியே சமூக வாழ்வும்அமைந்திருந்தது ,காலத்தை கணக்கிடுவதும் விவசாயத்தை ஒட்டியும் அந்தந்த காலத்தில் நிலவும் பருவ நிலைகளைப்  பிரதிபலிப்பதாகவும் இருந்தது.தமிழர்கள் ஒவ்வொரு 30 நாட்களுக்கிடையே வரும் அம்மாவாசை ,பவுர்ணமி ஆகியவற்றைப் பொறுத்தும்  தங்கள் காலத்தைக் கணக்கிட்டுக்  கொண்டனர்.பல ஆயிரம் ஆண்டுகள் கடைப் பிடித்து வந்த மரபு ,காரண ,வழிப்  பெயர்களை அந்தந்த மாதத்தைக் குறிக்க பயன்படுத்தி உள்ளனர்.

சித்திரை:
      
   காரணம் 1:       சித்திரை என்றால் அந்த மாதத்தில் கடுமையான வெயில் இருக்கும் ,அதற்கு முந்திய முன் பனிக் காலம் பின் பனிக்காலமாகிய தை ,மாசி,பங்குனி ஆகிய மாதங்களில் பனி மூட்டத்தில் ,காற்றின் நீர் பதத்தால் தூரத்தில் உள்ள பொருட்கள் மட்டுமல்ல அருகில் உள்ள பொருட்களும் தெளிவில்லாமலேயே தெரியும் ,ஆனால் சித்திரை மாத வெயிலில் பனி அடங்கி பார்க்கும் இடங்கள் ,பொருட்கள் எல்லாம் சித்திரம் போல் தெளிவாகத் தெரிவதால் தான் இதற்கு சித்திரை என்று பெயர் வந்திருக்கலாம்.

காரணம் 2:        சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று நிலவு மிகவும் அருகில் இருக்கும் ,இரவு நேரத்தில் அதனை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் ,அந்த நிலவு நேரத்தில் பார்க்கும் பொருட்கள் எல்லாம் சித்திரம் போல தோண்றுவதால்,இந்த மாதத்திற்கு சித்திரை என்று பெயர் வந்திருக்கலாம்.

வைகாசி:
                    சித்திரை மாத வெயில் முடிந்து ஆடிக் காற்று அடிக்கத் தொடங்கும் முன்பாக மழை மிதமாக பெய்யும் ,தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான பூர்வாங்க கால சூழ்நிலைகள் நிலவ ஆரம்பிக்கும்.இந்த காலத்தில் பெய்யும் மழையால் இவ்வளவு நாட்கள் வெயிலால் காய்ந்து கிடந்த  வைகை நதியில் நீர் கசிய ஆரம்பிக்கும் .தமிழ் வளர்ந்த மதுரையின் கலாசாரத்தையும் அன்றைய மக்களின் மன நிலையை ஒட்டி சிந்தித்தால் ,வைகையில் நீர் கசிய ஆரம்பிக்கும் இம் மாதத்திற்கு வைகாசி என்று பெயர் வந்திருக்கலாம்.


ஆனி:
                     வைகாசியில் மழை மிதமாகத்தொடங்கியவுடன் விவசாயத்திற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பித்துவிடும் .விவசாயியின் முதல் வேலை ,ஆடி மாதம் பெய்யும் மழையில் விவசாயம் செய்ய நிலத்தை உழவு செய்து பண்படுத்த வேண்டும்.நிலத்தை உழவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு மாடு வேண்டும் .தமிழில் மாட்டிற்கு மற்றொரு பெயர் "ஆ", "ஆ"என்றால் கால்நடைகள் என்று பெயர் .அந்தக் காலத்தில் கால்நடைகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக மந்தையாக வளர்க்கப்பட்டது .
   உழவு வேலை ஆரம்பிக்கும் முன்பாக இந்த "ஆ" நிறைகள் எனப்படும் மாட்டு மந்தையில் இருந்து தகுதியான் உழவு மாடுகள் தேர்ந்தெடுக்கப்படும்.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்காக "ஆ"நிறைகள் பல்வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்கு சென்றவைகள் திருப்பப்பட்டு உழவு மாடுகள் பிடிக்கும் நிகழ்வு இம்மாதத்தில் நடைபெறுவதால் ஆனி என்று பெயரிட்டிருக்கலாம்.

ஆடி:
                        ஆடி மாதத்திற்கு இரண்டு விவசாய சிறப்பு உண்டு ,அந்தக் காலத்தில் எல்லாம் வானம் பார்த்த பூமி தான் ,கண்மாய்கள் உருவாக்கப்படும் காலத்திற்கு முன்பாக ,காட்டு வெள்ளாமை என்று அழைக்கப்படும் மானாவாரி விவசாயத்திற்கு உழவு வேலைகள் இந்த மாதத்தில் தான்  ஆரம்பிக்கப்படும்.அதனால் தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்று விவசாயப் பருவம் பற்றி பழமொழி வழங்கப்படுகிறது.வைகாசி மாதம் ஆரம்பிக்கும் ,மேற்கே இருந்து வீசும் காற்றானது ,கேரளப் பகுதிகளில் பெரும் மழையாகவும் தமிழகப் பகுதிகளில் சாரல் மழையாகவும் பொழிய ஆரம்பிக்கும்.அப்பொழுது கேரள மலைப் பகுதிகளில் மழை பொழிந்தும் தமிழகப் பகுதிகளில் கடுமையான காற்று வீசும் .இதனைத்தான் "அம்மி பறக்கும் ஆடிக் காற்று "என்று அழைப்பர் ,இந்த மாதத்தில் ஆடாத பொருள் எல்லாம் ஆடும் இதனாலேயெ இம் மாதத்திற்கு ஆடி மாதம் என்று பெயரிடப்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.

ஆவணி :
                        ஆடி மாதம் தொடங்கும் விவசாய வேலைகள் ஆவணி மாதம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் .இந்த மாதத்தில் உழவுப் பணிக்காக மாடுகள் ஒரு நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கும் ,வீட்டில் இருந்து காட்டிற்கும் ,மந்தையில் இருந்து வீட்டிற்கும் என்று ஒரே மாடுகளின் அணிவகுப்பாக இருக்கும்,இதனாலேயே நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல "ஆ"என்றால் கால்நடை என்பதால் ,ஆவணி என்றால் கால்நடைகளின் அணிவகுப்பு என்பதாலேயே இம்மாதத்திற்கு ஆவணி என்று பெயர் வந்தது என்று அறுதியிட்டுக் கூறலாம்.
"ஆ"என்றால் பசு என்று மட்டும் பொருள் என்பதில்லை அது இரு பாலின மாடுகளைக் குறிப்பது என்பது எனது கருத்து.

புரட்டாசி:
                       இதனை புரட்டாடி என்று அழக்கப்படுகின்றது .வைகாசி மாதக் கடைசியில் லேசாக ஆரம்பிக்கும் மேற்கே இருந்து கிழக்கு நோக்கி ,தென்மேற்கு பருவமழையின் பொருட்டு வீசும் காற்று ,ஆனி மாதம் கொஞ்சம் பலமாகி ,ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் முழு ஆக்கிரமிப்பில் இருக்கும்.இந்தக் காற்றானது புரட்டாசி மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்து மேற்கே இருந்து பலமாக வீசிய காற்று புரண்டு ஓட ஆரம்பிக்கும் ,இதனாலேயே இம்மாதம் புரட்டாடி என்று அழைக்கப்படுகின்றது என்பது திண்ணம்.

ஐப்பசி:
                                 இது மழைக் காலம் ,இதற்கு முன்பு ,காற்று ஆதிக்கம் செய்து காற்றுக் காலம் முழுவதும் ஒய்ந்து மழை பொழிவதற்காக கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் ,அப்பொழுது நிலப் பகுதியில் ஒரு அசாதரண அமைதியானது காற்றுமண்டலத்தில் ஏற்படும்,அதேபோல பூமி, மழையால் செழிக்கும் நோக்கில்  பூமியில் ஒரு அசாதாரண நிலையும்,காற்றழுத்த தாழ்வு நிலையால் காற்று மண்டலத்தில் அசாதாரண வெக்கையும் ,இதையெல்லாம் காட்டிக் கொண்டிருக்கும் ஆகாயத்தில் ஒரு அசாதாராண நிலையும் காணப்படும் ,மொத்தத்தில் மழையின் ஆதிக்கம் தொடங்கும் முன்பாக ஐம்பூதங்களும் அடங்கி பசியோடு காணப்படுவதால் இம் மாதம் ஐப்பசி என்று அழைகப்பட்டிருக்கலாம்.

கார்த்திகை:
                         கார் என்றால் மேகம்.கார்த்திகை மாதத்தில் அடை மழை பொழியும் என்பதால் இம்மாதம் மேகங்களின் ஒத்திகை நடை பெறும் மாதமாகும்.இதனாலேயே "ஐப்பசி ,கார்த்திகை அடை மழை "என்னும் முது மொழி உருவாகியிருக்கும்.

மார்கழி:
                        மழைக் காலம் கழிந்து பனிக் காலம் ஆரம்பித்துவிடும் மாதம் இது.மாரி என்றால் மழை,மழைக்காலம் முடிந்த மாதம் என்பதனாலேயே இது மாரி கழிந்தது என்பது திரிந்து மார்கழி ஆயிற்று என்பது திண்ணம்.

தை:
                     இவ்வளவு நாட்கள் விவசாய வேலைகள் எல்லாம் செய்து பல கால சூழ்நிலைகளை அனுபவிக்கும் விவசாயி தனது விவசாயத்தின் பலன்களை அனுபவிக்கப் போகும் காலம் இது  ,இனி உணவுக் கவலை கிடையாது போட்ட முதலீடு எல்லாம் திரும்பப்போகும் காலம் ,இதனை நினைக்கும் போதே மனது மகிழ்ச்சியில் தைத்தை என்று குதியாட்டம் போடுவதால் இது "தை "மாதம் ஆகி இருக்கலாம்.

மாசி:
                       ஏறக் குறைய விவசாய வேலைகள் எல்லாம் முடிவடைந்து ,அறுவடை எல்லாம் செய்த மனிதனின் மனதில் ஒரு நிம்மதி உணர்வு பொங்குகிறது ,மனது கடந்த கால விவசாயத்தையும் அதன் அனுபவத்தையும் அசை போடுகின்றது.மனதில் முன்னோர்கள் காட்டிய சிவ வழி பாடும் அந்த சிவ வழிபாட்டிற்குரிய  அம்மாவாசை தினமான மகா சிவ ராத்திரி நாளும் அவனது மனதில் நிரம்புகின்றது.எனவே இந்த மாதத்தை அடையாளம் சொல்ல மகாசிவராத்திரியின் நினைவாக "மாசி"என்று ஆயிருக்கலாம்.

பங்குனி:
                               வெயில் காலம் ஆரம்பிக்கும் காலம் ,இவ்வளவு நாள் இருந்த கால சூழ்நிலை மாறி வெயிலின் உக்கிரம் ஆரம்பித்து விடும் .வெயிலின் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல் பனைமரம் தரும் பல கண்ணுடைய நுங்கை பருகி காலத்தை ஓட்ட வேண்டிய காலம் .
                                                                                    
பலகண் உடைய நுங்கு தரும் நீரைப் பருகி காலம் தள்ள வேண்டியகாலம் என்பதால் "பல கண் நீர்"பங்குனி ஆகியிருக்கலாம்.

கருத்துகள் இல்லை: