விழாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 24, 2011

கிருஷ்ண ஜெயந்தி

வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு
கிருஷ்ணராக அவதரித்தார்.
"எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ
அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்'
என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது
பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும்,
நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும்,
காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும்
நமக்கு விருப்பமான முறையில்   
எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி
கிருஷ்ணரை அடையலாம்.
கிருஷ்ணலீலையைக் கேட்டால்
பசி, தாகம் போன்ற உலகியல் விஷயங்கள்
நமக்கு தோன்றாது.
மதுரமான கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன்
புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய
கண்கள் தாமரை மலர் போல மலர்ந்துள்ளன.
வசீகரமான மயில் இறகு தலையில் அசைய
கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்ததுபோல
நம் உள்ளத்தை மயக்குகிறார்.
கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர்,
நமக்கு மழை போல் அருளை வாரி வழங்குகிறார்.

வரலாறு
தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும்
பிறக்கும் 8வது குழந்தையால் தனக்கு மரணம் நிகழும்
என்று அசரீரி மூலம் அறியும் கம்சன், அச்சமுறுகிறான்.
உடனே தேவகியையும், வாசுதேவரையும் சிறையில் அடைத்து
தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.
இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் அழித்த பின்,
8வது முறையாக தேவகி கர்ப்பமுற்றாள்.
இந்தக் குழந்தையையும் அழிக்க முடிவு செய்து,
குழந்தை பிறக்கும் வரை காத்திருந்தான் கம்சன்.
அதே நேரம் வாசுதேவரின் நண்பர்
நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பமுறுகிறாள்.
ஆவணி மாதம் அஷ்டமி திதி,
ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு கிருஷ்ணர் பிறந்தார்.
அதே நாளன்று யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி,
இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில்
கொண்டு சென்று சேர்த்துவிடுமாறும்,
அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை
இங்கே கொண்டு வந்துவிடுமாறும் வாசுதேவருக்கு கட்டளையிட்டார்.
வாசுதேவரும் கிருஷ்ணரை கூடையில் சுமந்து சென்று
அங்கு வைத்து விட்டு, பெண் குழந்தையை கொண்டு வந்து விட்டார்.
கம்சன் கொல்ல வரும் போது, அந்தக் குழந்தை காளி தேவியாக மாறி,
அவனை எச்சரித்து விட்டு மறைந்தது.
யசோதாவிடம் இருக்கும் குழந்தைக்கு
கிருஷ்ணர் என்று பெயரிட்டு
கோகுலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடினர்.
அனைத்து வீடுகளிலும் கிருஷ்ணன் காலடி பட வேண்டும் என்பதால்,
அவனுக்கு பிடித்த பண்டங்களை
வீட்டினுள் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் கோகுலவாசிகள்.
இந்த கொண்டாட்டங்களின் போது
மேற்கொண்டதாக கூறப்படும் சடங்குகள்
இன்றும் பின்பற்றப்படுகின்றன.
கிருஷ்ணரை வழிபடும் முறை

பொதுவாக கிருஷ்ணருக்கு விருப்பமான பலகாரங்கள்,
வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து,
கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் பின்பற்றப்படுகிறது.
பல்வேறு பழங்கள், அவல், வெண்ணெய், நாட்டுச்சர்க்கரை,
பூக்கள், அப்பம், தட்டை, வெல்லச் சீடை,
உப்புச் சீடை, முள்ளு முறுக்கு, தோயம் என்று
கிருஷ்ணருக்கு பிடித்த பட்சணங்களைப் படைத்து
அவரை வீட்டுக்குள் அழைத்து
அருள் பெறுவதே இந்தப் பண்டிகையின் சாராம்சம்.

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

தமிழ் வருட பிறப்பு

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் உளம கனிந்த புத்தாண்டு
                                                             
நல் வாழ்த்துக்கள்


14-04-2011 வியாழன் அன்று சித்திரை மாத பிறப்பு வருகிறது.

என் நினைவில் சித்திரை கனி-

சித்திரை முக்கனிகளும் வரும் காலம்.  
அதனால் கண்ணாடி முன் வைக்கும் கனி வகைகளில் மா, பலா, வாழை
முதன்மை வகிக்கும்.
 சாமி அறையில் அல்லது நடுகூடத்தில் ஓர் இடத்தில் முதல் நாள் இரவே
சுத்தம் செய்து கோலம் போட்டு, அதன் நடுவில் ஒரு முகம் பார்க்கும்
கண்ணாடி வைக்க வேண்டும்.
அதன் சட்டத்தில் சந்தானம், குங்கும போட்டு வைக்க வேண்டும். 
 அதன் முன் ஒரு தாம்பாளத்தில் முக்கனிகள் , வேறு பழங்கள்.
வெற்றிலை, பாக்கு, [வெட்டு பாக்கு]
 மஞ்சள் கொம்பு வைக்க வேண்டும்.
அதன் மேல் பூ,  எலுமிச்சை பழம் வைக்க வேண்டும்.
இனித்தான் முக்கிய பொருட்களே வருகிறது.
பணம், தங்க நகை, தங்க காசு, நாணயங்கள் என
அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் வைக்கலாம்.
 ஒரு படி நிறைய அரிசி வைக்க வேண்டும்.
அந்த வருடத்திற்கு உரிய புது பஞ்சாங்கம் வாங்கி அதற்கும் மஞ்சள், குங்கும
போட்டு வைத்து வைக்க வேண்டும்
ஒரு விளக்கைமஞ்சள், குங்கும பொட்டு இட்டு எண்ணை ஊற்றி,
திரி போட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அதிகாலையில் பாட்டியோ, அம்மாவோ எழுந்து விளக்கு ஏற்றி

‘நாடும், வீடும் எல்லா நலன்களையும் பெற்று, அந்த வருடம் நல்ல வருடமாய்

அமைய வேண்டும்’என  முதலில் சாமி கும்பிடுவார்கள்.
 பின் வீட்டில் உள்ளவர்களை எழுப்புவார்கள்.
கண்ணை மூடிக் கொண்டே சென்று கண்ணாடியில் தான் விழிக்க வேண்டும்.
காலை குளித்து வந்த பின் தீபாராதனை காட்டி சித்திரை தாயை வணங்க
வேண்டும்.

அந்த காலத்தை நினைத்தாலே நான் சிறு குழந்தை ஆகி விடுகிறேன். 
 பழங்கள் வாங்க கடைவீதிக்கு ஓடுவதும்,
அம்மாவிற்கு உதவி செய்வதும் ஒரே ஆர்வ கோளாறுதான் 
வீட்டு நிலையில் மாவிலை தோரணம் கட்டு வார்கள்.
 வாசலில் பெரிய கோலங்கள் போடப்படும்.
இனிப்பு,  நிறைய பதார்த்தங்களுடன் சாப்பாடு. 
முக்கியமாக பள்ளி விடுமுறை நிச்சியம்.
கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேண்டும்?


ஒரு காலகட்டத்தில் நானே அலங்காரங்கள் செய்வேன்.
வாசலில் பெரிய கோலமாக போட சில நாட்களாகவே யோசித்து, அதை
போட்டுப் போட்டுப் பழகி இருந்தாலும், போடும் போதும் டெண்சனாக இருக்கும்.
முதலில் கோலத்திற்கு புள்ளி வைப்பதில்  ஆரம்பிக்கும்-
புள்ளிகள் ஒழுங்காய், சம இடைவெளிகளில் வைக்க வேண்டும்.
ஒரே சீராய்  கோடுகள் . போட வேண்டும்.
புள்ளிக் கோலங்கள் என்றுமே சிக்கல் கோலங்கள். தான்.
கொஞ்சம் பிசகினாலும் முடிந்தது. முடிக்கவே முடியாது.
எல்ல சாமிகளையும் கும்பிட்டுக் கொண்டு நல்லபடியாய் போட்டு முடிப்பது
அந்த வயதில் ஒரு பெரிய விசியமாய் இருந்தது
.அக்கம் பக்கம் இருப்பவர்கள் பாராட்ட வேண்டும் என்பதுதான் இந்த
மெனக்கெடலின் basic. 



கோலத்திற்கு செம்மண் கரை கட்ட வேண்டும்
காவிப் பொடியை அளவான நீரில் கரைத்து வைக்க வேண்டும்.
தண்ணீ அதிகமானால் வழிந்து ஓடும
கெட்டியாக இருந்தால் கோடு இழுக்கவே முடியாது.
ஒரு சிறு துணியை இக்கரைசலில் நனைத்து கரை கட்ட வேண்டும்.
 தேங்காய் குடுமியில் அளவாக எடுத்து அதிலும் இடலாம்.
இப்போது பெயிண்ட் பிரஷ் கொண்டு சுலபமாக போடலாம்.
 சரியான பக்குவத்தில் கரைப்பது,
துணியில் அல்லது குடுமியில் ஒழுகாமல் எடுப்பது,
ஒரே அளவாக கோடு இழுப்பது என்று காவி இடுவதும் ஒரு கலைதான்.
தேவை பொறுமை + கவனம் [concentration]
தற்போது புள்ளி கோலங்கள் சிறு புள்ளிகளாகி மறைந்து விடுமோ
எனும் நிலையில் உள்ளது.
சில காலமாகவே போட சுலபமாகவும், வண்ண பொடிகள் கொண்டு

கண்ணைக் கவரும் விதமாய் போடும் ரங்கோலி வகை கோலங்கள் அதிக

அளவில் போடப் படுகின்றன.


இரண்டுமே அழகுதான்



ஆனால் இன்றைய கால கட்டத்தில் கோலம்போடும் அளவிற்கு வாசலும்

இல்லை;

நேரமும் இல்லை; ஓட்டும் ஸ்டிக்கர் கோலங்கள் வந்து விட்டன.

தொல்லைக் காட்சியின் பயன்பாட்டால் பண்டிகை தினங்களே அரிதாகி

விட்டது.

. அன்றைய பண்டிகை கொண்டாட்டங்கள் இன்றைய நினைவுகள்.


நம் பிள்ளைகளுக்கு நம்மால் சொல்லத்தான் முடியும்.

அதைச் செய்வோம்.

அவற்றை தொடர்வதும், விடுவதும் அவர்கள் விருப்பம்.



புதன், டிசம்பர் 15, 2010

வைகுண்ட ஏகாதசி


நமது வாழ்நாளில் ஒரு வருடம் தேவ வருஷத்தில் ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி முடிய உள்ள ஆறு மாதம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் இருப்பதால் இப்பகுதி இரவுக் காலத்தில் அதிக இருட்டும், மழையும், பனியும், குளிரும் பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது. இத்தணத்தில் மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி (பிரம்ம முகூர்த்தம்) உள்ள கால அளவில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுந்தத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பது மரபு.
மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி .அதிகாலை சொர்க்கவால் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். (தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளவர்) அந்த நேரத்தை நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம்.
ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். வருடம் முழுவது ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி காலை பூஜை முடித்து உணவு உட்கொள்ள வேண்டும். இதனால் நம் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவோம் என்பது ஒரு நம்பிக்கை.
ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியாவிட்டாலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். மூன்று கோடி ஏகாதசி விரதம் இருந்த பலனை தரக்கூடியது என்பதால் இந்த ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனப்படும்.
முன்பு முரன் என்ற ஒரு அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மிகுந்த துன்பத்தை தந்து வந்தான். அவர்களது துன்பத்தைப் போக்க மகாவிஷ்ணு முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். போரிட்ட களைப்பு நீங்க அறிதுயிலில் இருந்தவரை கொல்ல வந்த முரன், விஷ்ணுவின் ஆற்றலில் இருந்து உருவான தேவ பெண்ணின் ஹுங்காரத்தால் எரிந்து சாம்பல் ஆனான். மகா விஸ்ணு அப்பெண்ணிற்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.
ஏகாதசியின் முந்தய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். மருநாள் ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து நீராடி சொர்க்கவால் திறப்பு நிகழ்ச்சியை ஆலயம் சென்று கண்டு பரந்தாமன் லெட்சுமி தேவியுடன் வருவதை போற்றி வணங்க வேண்டும் .
விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உளுந்து கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்து அல்லது கிடைக்கும் நெல்லிக்காயையாவது உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
துவாதசி அன்று முதல் நாள் கண் விழித்தவர்கள் அதிகாலையில் குளித்து திருமாலை வணங்கி ஹரி ஹரி ஹரி என மும்முறை கூறி சுண்டைக்காய், நெல்லிக்காய், இதில் கொஞ்சம் எடுத்து பல்லில்படாமல் உண்ண வேண்டும் இதற்கு "பாரனை'' (விரதம்) முடித்தல் என்று பொருள்.புதிய வரவு ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் அகாய சூரராக விளங்குவர். பொறுமை, இன்சொல், நுண்ணறிவு, சாந்தமே ஜெயம் எனும் கோபம் தணிந்த ஆற்றல் என சகல நற்குணங்களுடன் இருப்பார்கள்.
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனித் தனியாக தானங்கள் செய்யலாம் என்றாலும் அது எல்லாம் வசதியானவர்கள் தானே செய்ய முடியும் என்ற சோர்வு நிலை வேண்டாம். ஒரு பிடி அகத்திக் கீரையை பசுவுக்கு தானமாகக் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் ஏகாசி அன்று பசுவும் கன்றுமாக தானம் கொடுங்கள் சகல நன்மையையும் உலகம் உள்ள வரை உங்கள் சந்ததியர் பெறுவர்.
அனைத்து விரத நாட்களிலும் அன்னதானம் செய்யப்படும். ஏகாதசி விரத நாளில் உண்ணாமல் இருப்பதும் கண் விழித்து பாசுரங்கள் பாடுபவதும் செய்ய வேண்டும் என்பதால் அன்ன தானம் மட்டும் இந் நாளில் செய்யக் கூடாது. அதற்குப் பதில் பழவர்க்கங்களை தானமாக தரலாம்.
காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை;
கங்கையை மிஞ்சிய தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு ஈடான விரதம் இல்லை. என்பது ஆன்றோர் வாக்கு. இவ்விரதம் இருந்து நற்பலன்களைப் பெறுவோம்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். திருப்பதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 108 திவ்ய தேசங்களிலும் பெருமாளை தரிசித்து பயன் பெறலாம். திவ்ய தேசங்களை மனதில் தியானித்து அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வேண்டுதல்களை செய்து திருமாலின் அருளைப் பெறுவோம். 

செவ்வாய், டிசம்பர் 14, 2010

வைகுண்ட ஏகாதசி

இந்த நன்னாள் இந்த மாதம் 17 ந் தேதி வெள்ளிக் கிழமை வருகிறது.
அன்று முழுவதும் துளசி தீர்த்தம் அருந்தி, அன்று இரவு முழுவதும் கண் விழித்து இருந்து நாராயண நாமம் சொல்லி .மறுநாள் துவாதசி அன்று காலையில் சாப்பிட்டு விரதம் முடிப்பது மரபு.
இந்நாளைப் பற்றி சிலவிஷயங்கள் நம்பப்படுகிறது.
1. ஏகாதசி விரதம் இருந்தாலே போதும்? செய்த பாவங்கள் தீர்ந்து விடும். is it ?
அப்ப எந்த பாவம் வேண்டுமானாலும் செய்து விட்டு just இந்த விரதம் இருந்தால் சரியாகி விடுமோ? பாவவான்கள் புண்ணியவான்கள் ஆகிவிடுவார்களா? so simple
2. இந்த நாளில் மரணம் அடைபவர்கள் எத்தகைய பாவிகளாக இருந்தாலும் straight ஆக சொர்க்கம் போய்விடுவார்கள்; is it?
நாம் பாவங்களை செய்து கொண்டே இருப்போம்; ஏகாதசியன்று விரதம் இருந்து பாவ விமோசனம் பெறலாம் என்று அர்த்தம் இல்லை.
ஒரு குட்டிக் கதை-
ஒரு முனிவரும், அவர் சீடரும், ஒரு நதியைக் கடக்க படகுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு தாசிப் பெண், அக்கரை செல்ல வந்தாள். அவளைக் கண்ட முனிவர் "இழிந்த தொழில் செய்யும் நீ, நாங்கள் செல்ல இருக்கும் படகில் வரக் கூடாது; பாவம் செய்பவள் நீ; வேறு படகில் வா" எனக் கடிந்து கொண்டார்.
அவள் மனம் வருந்தி ஒதுங்கி நின்று கொண்டாள். நிர்பந்தம் காரணமாகவே இத்தொழில் இருப்பது தெரியாமல் முனிவர் பேசிவிட்டாரே என மிகுந்த வேதனை அடைந்தாள். அதனால் நெஞ்சு வலி வந்து மரணம் அடைந்தாள்.
முனிவர் சென்ற படகு கவிழ, நீச்சல் தெரிந்த படகோட்டியும், சீடரும் தப்பி விட்டனர்.முனிவரோ நீரில் மூழ்கி இறந்தார்.
இறந்த பெண்ணும், முனிவரும் எமனுலகம் சென்றனர். ஒரே இடத்தில் நின்றனர்.பின் நரக வாசல் வழியே முனிவரும், சொர்க்க வாசல் வழியே பெண்ணும் அழைத்துச் செல்லப் பட்டனர்.
கோவம் அடைந்த முனிவர் " இதென்ன அநியாயம்! தவமே வாழ்வாகக் கொண்ட நான் நரகம் செல்வதா? பாவத் தொழில் செய்த பெண்ணிற்கு சொர்க்கமா ?" எனக் கேட்டார். யம தூதர்கள் " முனிவரே, பிறரை குறை கூறுபவர்கள், அவர்கள் நிலை அறியாது நிந்தித்துப் பேசுபவர்கள், எவ்வளவு பெரிய தபஸ்வியாக இருந்தாலும் தங்களது மேலான தவ வலிமையை இழந்து சாதாரணமானவர்களை விடவும் கீழ் நிலைக்குப் போய் விடுவார்கள். மேலும் நீர் ,அவள் மனதை குத்தி காயப் படுத்தினீர்கள்; பிறர் மனத்தைக் காயப்படுத்துபவர்களின் கண்களை குத்துவது எங்கள் வழக்கம்; இப்போது உங்கள் கண்களும் பறிக்கப்படும். அந்த பெண்ணோ இழிந்த இப்படி ஒரு வாழ்வு , இனி வரும் பிறவிகளில் வரக்கூடாது என, ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை நினைத்து கண்ணீர் வடித்து வாழ்நாள் எல்லாம் அவர் நினைவாகவே வாழ்ந்தாள்; அதனால் அவள் வைகுண்ட பதவியைப் பெறுகிறாள்" என்று கூறி அழைத்துச் சென்றனர்.
so வெறும் விரதங்களும், தவங்களும் சொர்க்கத்தை தராது. பிறர் மீது நாம் காட்டும் கருணையும், இரக்கமுமே சொர்க்கத்தை தரும்.