நல்லது செய்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்லது செய்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 05, 2011

மனிதர்களை அறிவோம்

 தனி மனித முயற்சியால் ஒரு தலித் காலனியில், அரசு உதவியின்றி

இயங்கி வருகிறது ஒரு நூலகம்.

இதை பார்த்ததும் உங்களுக்கு என்ன  தோன்றுகிறது?  ஆச்சிரியம்?

படித்துப் பார்த்தால், மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது சத்திய

வாக்கு என்பதை உணர முடிகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி, வடக்கு  இளையாற்றங்குடியை

சேர்ந்த விஜய் என்பவரின் கனவு நனவானதின் விளைவே இந்த நூலகம்.

காரைக்குடி பொது நூலகத்திற்குச் சென்றார்.

அங்கு அழகழகாய் அடுக்கி வைக்கப் பட்டுள்ள நூல்கள்,

அவற்றை ஆர்வமாய்ப் படித்துக்கொண்டு இருக்கும் வாசகர்கள்

இதை பார்த்ததும் ஏற்பட்ட பரவசம், ஏக்கமாய் மாறி

பின் அதுவே அவரின் கனவாய் ஆனது.

 ஒரு தலித் காலனியில் நூலகம் இருக்கக் கூடாதா?  என்கின்ற

இவரதின் கனவின் விஸ்வரூபமே இது.

இவர் வசதியனவரோ, அரசியல் செல்வாக்கோ உடையவரல்ல.  

தற்பொழுது திருப்பத்தூரில் உள்ள தனியார் கலைகல்லூரியில்

இளங்கலை வரலாறு பயின்றுவரும் ஒரு மாணவர்

இன்றைய காலகட்டத்தில் மாணவர் சமுதாயம் பல திசைகளில்

கவன சிதறலொடு இருக்கும் போது, இவர் மட்டும் ஆக்கப் பூர்வமாக

செயல்படுவதே மிகவும் பாராட்டுக்குறிய செயலாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இவர் நூலகம் அமைக்க நினைத்த

இடமோ  ஒரு    தலித் காலனி.

இதில் எவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருக்கும்?????????

 அவர் சொல்லில்,

"எங்கள் ஊருக்கென கட்டப்பட்ட பொது பயன்பாட்டுக்கான கட்டிடம்

பன்னிரெண்டு வருடங்களாக எந்தப் பயனும் இன்றி கேட்பாரற்று

இருந்தது நினைவுக்கு வந்தது.

அதை சீர்படுத்தி நாம் ஒரு நூலகமாக பராமரித்தால் என்ன என்று

தோன்றியது.

என் ஆசையை அப்பொழுது என் ஆசிரியராக இருந்த முருகேசன்

அவர்களிடம் கூற, அவர் எனக்கு ஊக்கம் அளித்தார்.

ஊர்ப்பெரியவர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று அனைவரிடமும்

அந்த நூலக கட்டிடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வாங்கி,

2008 ல் இருந்து இதை நல்ல முறையில் பராமரித்து வருகிறேன்."

இவரது அயராத முயற்சியாலும், முருகேசன் ஆசிரியர் கொடுத்த

ஊக்கத்தாலும் 'தமிழ்க் கோவில்' என்ற பெயரால் செயல்படுகிறது

விளையாடும் பிள்ளைகள் போகிற போக்கில் உள்ளே வந்து புத்தகங்கள்,

நாளிதழ்களில் படம் பார்த்துச் செல்கிறார்களாம்.

அதுவே அங்கு பெரிய விசியம்தானாம்.

இங்குள்ளவர்கள் படிப்பறிவு இல்லாத கூலி வேலை செய்பவர்கள்;

அவர்கள் பெயரை எழுதி பழக இப்போது இங்கு வருகிறார்களாம்.

அந்த ஊரில்,  படித்த அரசு உழியர்கள் விஜயனின் தந்தை வீரன் அய்யாவும்,

 அவரது சித்தப்பா நகராஜனும்தானாம்.

காலேஜ் போகிற முதல் ஆள் விஜயனாம்.

இந்தியாவின் ஆன்மா ??????????

அந்த காலனியில்  300 இருக்கிறார்கள்.

மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வந்து படிக்கிறார்கள்.

[ போற்றத்தகுந்த மாற்றம்]

புத்தகங்கள்   தந்து உதவிய

இளையாற்றங்குடி ஜமீந்தார் திரு. ஆர்.சி. ராஜா,

டி. அழகாபுரி ,

ஆர்.எம். முத்தைய செட்டியார்

உட்பட உதவிய அனைவரையும் நன்றியுடன் கூறுகிறார்கள்.

ஆசிரியர் முருகேசன், 'இப்போதுள்ள சுமார் 2000 புத்தகங்கள் போதாது ;

இன்னும் வேண்டும்' என்கிறார்.

வேலை கிடைத்து வெளியூர் சென்று விட்டால் இந்த நூலகத்தை

பராமரிக்க முடியாது என்பதால், வெளியில் வேலைக்கு செல்ல மாட்டேன்

என்பதில் உறுதியாய் இருக்கிறார் விஜய்.

வாழ்க; வளர்க

அவரது லட்சியம் --------அந்த கிராமத்தை பெரியஅளவில்

வளரச்சி அடையச் செய்ய வேண்டும்;

அதற்கு கற்றறிந்த பெரியவர்களின் ஆலோசனைகள் வேண்டும் என்கிறார்.

கழிவறைகளே இல்லாத, அரசு கட்டி கொடுத்ததைக் கூட பயன்படுத்தாத

மக்களை முன்னேற்ற வேண்டும் என பாடுபடுகிறார்.

"இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும்;

சில நேரம் போட்டிகளுக்கு தயார் செய்யக்கூட புத்தகங்கள்

இல்லாமல் கஷ்டப்பட வேண்டிருக்கிறது;

என் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கு; பிள்ளைகளுக்கு சொல்லித்தரணும்;

வாசகர் வட்டம், பெரியவர்களின் சொற்பொழிவு என்று மாதம்

ஒரு முறை நடத்துவேன்;

அதைத் தொடரணும்;

முதலில் இந்த ஊரில் எல்லோரும் படிக்கணும்"

ஏக்கத்துடன் கூறுகிறார் விஜய்.

"கனவு காணுங்கள் " என்றார் திரு. அப்துல் கலாம் அவர்கள்.

விஜய் கனவு காண ஆரம்பித்து விட்டார்.

ஜெயிப்பது நிச்சியம்.

 இந்த நல்ல உள்ளத்திற்கு உதவ விரும்பும் உயர்ந்த உள்ளங்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்;

முருகேசன்-  ----94886 22826

விஜய்------- 97871 44366

புத்தகங்கள் கொடுத்துக்கூட உதவலாம்.








சனி, மே 14, 2011

மனிதர்களை அறிவோம்

மே மாத 'புதிய தலைமுறை' இதழில் ஒரு அற்புதமான மனிதரைப் பற்றிப்

படித்தேன். நாடு எனக்கு என்ன செய்தது? வீடு என்ன செய்தது?

என்றுபுராணம் பாடியே  வாழ்நாளைகழிப்பதுதான்  நம்மில்

பெரும்பான்மையோரின் பழக்கம். ஆனால் 'ஒவ்வொரு மனுஷனுக்கும்

அவனோட உழைப்பு மட்டும்தான் பூர்வீக சொத்து' என்று தாய் சொல்லிய

சொல்லை வேதவாக்காகக் கொண்டு ஆதரிக்க யாருமின்றி

 தன்னந்தனியாக போராடி, இன்று தஞ்சாவூர்  தமிழ் பல்கலைகழகத்தின்

கல்வியியல் துறையில் இணைப் பேராசிரியர் ஆக உயர்ந்துள்ள

திரு. சின்னப்பன் அவர்களைப் பற்றிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து

கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

முடிந்தவரை அவர் வார்த்தைகளிலேயே சொல்லுகிறேன்.

பட்டினியால் பரிதவித்தாலும், படிக்க வேண்டும் என்பதுதான் சின்னப்பனின்

லட்சியம். கல்விக்காக இவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது.

'' நான் மனித முகங்களை அடையாளம் காணும் முன்பே என் தந்தை

இறந்து போனார். பூர்வீகச் சொத்து ஏதும் கிடையாது. எங்க அம்மா அடிக்கடி

சொல்லுவாங்கள்;' 'ஒவ்வொரு மனுஷனுக்கும்

அவனோட உழைப்பு மட்டும்தான் பூர்வீக சொத்து' ன்னு. என்னுடைய

வாழ்க்கை சராசரியான வாழ்க்கை இல்லை. நான் நல்லா படிக்கணும்

என்று  என் அம்மா ஒரு விவசாயக் கூலியாக வேர்வை சிந்தாத

நிலங்களே எங்க சுத்து வட்டாரத்தில் கிடையாது. அப்படி ஒரு உழைப்பு.

எங்கம்மா இருந்த வரைக்கும் எனக்கு சாப்பாட்டுக்கு பஞ்சம் வந்தது

இல்லை. ஆனா, போடற துணியில் இருந்து, பள்ளிக்கூடத்து பையில்

நோட்டு, புத்தகம் இல்லாத வரைக்கும் பஞ்சம் வாட்டியது. வறுமையால்

அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தேன். ஹாஸ்டலில் இருந்து

வீட்டிற்கு போகும்போது 60 பைசா பஸ் கட்டணம் இல்லாமல் 15கி மீட்டர்

நடந்தே போயிருக்கிறேன். என் பள்ளியில் கொடுத்த புது சீருடை

ஒன்றையே தினமும் துவைத்து உடுத்திக் கொள்வேன்.  

எனக்காகவே வாழ்ந்த அம்மா நான் 12ம் வகுப்பு படிக்கும்

போது இறந்துட்டாங்க. அப்பா எனக்கு அம்மாவை விட்டுப் போனார்; எங்க

அம்மா எனக்கு வைராக்கியத்தை விட்டுப் போனாங்க.'' 

வறுமையிலும் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு விழுப்புரம் மாவட்டத்தில்

வறுமைக்கு உட்பட்ட மாணவர்கள் இன்றும் படிக்கச் செல்லும் திருச்சிக்கு

கல்லூரிப் படிப்பை படிக்க பயணப்பட்டிருக்கிறார்.

எந்த சொந்த பந்தமும் இல்லாத நிலையில் தன்னந்தனியே கல்லூரியை

நோக்கிப் புறப்பட்ட அவர் பெயிண்டிங் வேலை, வெல்டிங் கடை,

மெக்கானிக் கடை, கட்டிட வேலை, ஹோட்டல் வேலை, ப்ளம்பர் என தன்

கல்விக் கட்டணத்தை கட்டுவதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம்

பாடுபட்டு உழைத்து சம்பாதித்திருக்கிறார்.

''பலவேளை பட்டினிக்கு, ஒருவேளை உணவிட்டு என் உயிரின்

தொடர்ச்சிக்கு உதவிய தூயவளனார் கல்லூரியின்   மதிய உணவு

திட்டத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திருச்சி வந்த பின்பு ஆறு மாதத்திற்கு தொடர்ந்து எங்கள் கல்லூரியில்

தரப்படும் மதிய உணவு மட்டுமே எனக்கு ஒரு நாள் உணவாக இருந்தது.

என் படிப்பிற்காக புதுசு புதுசாக வேலை தேட வேண்டிய கட்டாயம்

இருந்தது. வறுமை என்னைத் தின்னத் தொடங்கியபோது அதை என்

உழைப்பால் விரட்டத் தொடங்கினேன்.

நம் வாழ்க்கையை படிப்பு என்ற ஆயுதத்தால் மட்டும்தான் வளமாக்கிக்

கொள்ள முடியும் என்ற நம்பிக்கை என்னை தொடர்ச்சியாக பல பட்டங்கள்

பெற வைத்தது. வேலைக்குச் சென்று கொண்டே படித்ததால் ஒரு

நாளைக்கு அதிகபட்சமாக நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவேன்''

என்று   தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்கிறார் சின்னப்பன்.


வேலை செய்து கொண்டே படித்து

8  பட்டப் படிப்புகள்

எம். எட்

2 எம். பில்

2 பி. ஹெச். டி  முடித்துள்ளார்.

பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக வந்துள்ளார்.

இன்று தஞ்சாவூர் பல்கலை கழகத்தில் கல்வியியல் துறையில் இணைப்

பேராசிரியராக தான் கற்ற கல்வியை பிறர்க்குப் போதித்து வருகிறார்.

விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, கடலூர்,

காஞ்சிபுரம், திருவள்ளூர்., விருதுநகர் மாவட்டங்களை ஒன்றிணைத்து

கிராமப்புற ஏழை மாணவர்களுக்காக தன சொந்த செலவில் ''வளர்கல்வி

மையம்''ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதன்மூலம்,

ஏழைமாணவர்களை பள்ளி முதல் பல்கலைகழக அளவில் படிக்க

வைத்தல்,

நுழைவுத் தேர்வுப் பயிற்சி,

முன் ஆயுத்தப் பயிற்சி முகாம்,

வழிகாட்டுதல் முகாம்,

ஏழை மாணவர்களுக்கு 3000----- 5000  ரூபாய் வரை கல்வி உதவித் தொகை

தருதல்

என பல உதவிகளை செய்கிறார்.

இந்த மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பவர்களில் 80%  பேர் ஆசிரியர்கள்.

பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த  200 க்கும்  மேற்பட்ட மாணவர்கள் இந்த

அமைப்பின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

சின்னப்பனின் அடுத்த இலக்கு ''கிராமங்கள் நோக்கி கல்வி''

எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு கிராமம் கிராமமாக  சென்று, ஏழை

மாணவர்களை கண்டறிந்து படிக்க வைத்து, அவர்களுக்குரிய வேலை

வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் இதன் நோக்கம்.

யார் தயவும் இல்லாமல், யார் வழிகாட்டுதலும் இல்லாமல், தனக்கான

வாழ்க்கையை தானே அமைத்து, அதில் தன்னம்பிக்கையோடு நடமாடும்

சின்னப்பன் இன்றைய மாணவர்களுக்கு ஒரு முன்னோடி என்பதில்

ஐயமில்லை.

பேராசிரியர் சின்னப்பனின் தொடர்பு எண்-  94431 81034

திரு. சின்னப்பனைப் போல் உதவும் உள்ளம் இருந்தாலும் [பண உதவியோ,

அல்லது வேறு விதமான உதவியோ]  வாய்ப்புகள் இல்லாத நம்மை

போன்றவர்கள், செய்யக்கூடிய ஒரே உதவி அவருக்காக பிரார்த்தனை

செய்வது மட்டுமே,

 அவர் எண்ணங்கள் நல்ல முறையில் செயல்படுத்த அவருக்கு எல்லாம்

வல்ல இறைவன் அருள் செய்வாராக!

நல்ல உள்ளங்கள் என்றுமே தோத்ததாக சரித்திரம் இல்லை.

வாழ்க அவரது பணி;

வளர்க அவரது சேவைகள்.

நன்றி- புதிய தலைமுறை