வெள்ளி, பிப்ரவரி 19, 2010

தேர்வு ஜுரம்

தமிழ்நாட்டில் இந்த ஜுரம், விஷ ஜுரம் போல் வீட்டுக்கு வீடு பரவிக் கொண்டு இருக்கிறது. சிக்கன்குனியா,மட்டன்குனியா மாதிரி இது தேர்வு குனியா .இதற்கு பெற்றவர் மருந்து, அடுத்தவர் மருந்து, புத்தக மருந்து என பற்பல அறிவுரைகள் சொல்லப்படுகிறது.இதையெல்லாம் தாண்டி, கம்ப்யூட்டர் காலத்திற்கு தகுந்தபடி இந்த முறை T.Vயில் , தற்பொழுது அனைவராலும் அறியப்படும் சமையல் நிபுணர்
ஒருவர் தேர்வுக்கு முதல் நாள் சாப்பிட வேண்டிய உணவுகளில் துவங்கி தேர்வு அன்று சாப்பிடும் உணவு வரை கூறுகிறார்.ஆயிரம் நன்றிகள் அவருக்கு. இப்ப அதல்ல மேட்டர். இவைஎல்லாம் யாரைச் சென்று அடைகிறது? என்பதுதான்இன்றைய மேட்டர்.
CITY,TOWN மாணவர்களுக்கு, சந்தேகமே இல்லாமல், புத்தகங்களில், தொலைக்காட்சியில் வருவது எல்லாமே சுலபமாக, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அதை பின்பற்றினாலும், பின்பற்றாவிட்டாலும் அவர்கைளச் சென்று அடைந்து விடும். {ஆ....எவ்வளவு பெரிய வாக்கியம்; நன்றி என் தமிழ் ஆசிரியர்களுக்கு]
பெரிய பள்ளிகளில் அனுபவப்பட்ட ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் சத்தான [?]பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும் சத்தானவர்கள்தான். தேர்வு அன்றுதான் நல்ல உணவு சாப்பிடுவார்களா? தினம்தினம் சத்துத்தான்! ஊட்டம்தான்.
இதில் BEAUTY என்னன்னா தேர்வு உணவு ஸ்பெஷல் மெனு என்று சொல்லப்படுவதில் சீஸ்,ஜூஸ், சாலட்,பழங்கள்,முட்டை பிரட்,மீன், கோழி, காய்கறிகள் ....................என நீண்டு கொண்டே போகிறது.இந்த
நீண்ட பட்டியல் நீண்டு கொண்டே இந்தியாவின் உயிரைச் சென்று அடையுமா? என்பதுதான் இன்றைய மேட்டர். புரியலையா? இந்தியாவின் உயிர் எது? சத்தான உணவு சாப்பிடாமல் மஹா ஒல்லியான ஒரு கைத்தடி தாத்தா சொல்லியிருக்கிறார்? எனக்கே நான் என்ன சொல்லவந்தேன் என்று மறந்து விட்டது; மூக்கைச் சுற்றி தலையை தொட முயன்றால் .............?நேரா விசயத்திற்கு வரேன்.
கிராமங்களிலும் மாணவர்கள் படிக்கிறார்களே? அவர்களுக்கு இந்த
மெனுவை எப்படித் தெரியப்படுத்துவது?o.k.ஓரளவிற்கு புத்தகங்கள்,newspaper படிக்கிறார்கள்: T.V.யும் கலைஞர் அவர்களின் தயவால் எல்லா வீட்டிலும் இருக்கும்? அதனால் மெனுவை தெரிந்து கொள்ளுவதில் problem இல்லை. இதில் என்ன பிரச்சனை என்றால்

இவைஎல்லாம் என்னவென்று தெரியுமா?
விற்கும் பெரிய கடைகள் இருக்குதா ?
அம்மாக்களுக்குச் செய்யத் தெரியுமா?
மெய்னா வாங்க துட்டு இருக்கா துட்டு?
அதனால் இவர்களின் தேர்வு ஸ்பெஷல் மெனுவை,ஸ்பெஷலா யோசித்து கொடுக்க வேண்டும்.
அவர்களுக்குப் பழக்கமான உணவாக இருக்க வேண்டும்.
எளிதாக கிடைக்கக் கூடியதாகவும், அவர்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
அம்மாக்களுக்குப் புரியும்படியும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும்.
அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ற உணவாக இருப்பது மிக, மிக முக்கியம். [நம் நாட்டில் பெரிய அளவில் மாணாக்கர்கள் பல மைல் தூரம் நடந்தும்,சைக்களிலும், பஸ்சிலும் வருகிறார்கள்]
இதற்கு தகுந்த மாதிரிசமையல் நிபுணர்கள் செய்முறைகளை உண்டாக்கலாம்.
மதிய உணவில் இதை அரசாங்கமே கொண்டு வரலாம்.
ஆசிரியர்கள் "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு; இங்கு வந்து என் உயிரை எடுக்கிறாய்" என்றெல்லாம் அன்பாக பேசாமல் இருப்பதே பெரிய உதவி. அவர்கள் வீட்டு வேலைகளை செய்யச் சொல்லாமல் இருப்பது மிகப் பெரிய உதவி.
தேர்வு எழுத பயிற்சி தரலாம்.
பெற்றவர்களை கலந்து பேசலாம்.
இதில் பெற்றவர்களின் பங்களிப்பும் இருக்கிறது.
தேர்விற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும் சூழ்நிலையை உண்டாக்கித் தர வேண்டும். [காட்டு வேலைக்குப் போ, வீட்டு வேலை செய், மாடு மேய்க்கப் போ என்று சொல்லாமல் இருந்தாலே போதும்]
படிப்பதற்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.[சண்டைகளை மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்களும் நிம்மதியாக சண்டை போடலாம்.]
டி .வி. பொட்டி பார்ப்பதை குறைத்துக் கொள்ளலாம்.
"கழனி வேலை செய்யறவனுக்கு பாசானால் போதாதா? கடுதாசி படிக்கத் தெரிந்தால் போதும்" என்று பையனிடமும், "உன்னை இம்புட்டு நாள் இஸ்கூலுக்கு அனுப்பியதே அதிகம்: நாலெழுத்து படிச்சப் புட்டு கலெக்டரா ஆகப் போறே?சட்டி, பானை கழுவ இது போதும்"என்று பெண்ணிடமும்
இது போன்ற நம்பிக்கையைக் குறைக்கும் பேச்சைப் பேசாமல் இருப்பதே மிக,மிக, பெரிய உதவி.[ இதையெல்லாம் மீறி ஒருவர் படித்து,நல்ல நிலமையை அடைந்தால் அதை அனுபவிக்கப் போறவர்களும் பெத்தவங்கதான்.] .
ஆனா இப்ப நாட்டில் என்ன நடக்குதுன , இந்தியாவின் உசுருகள்தான் , உசுரை கையில் பிடுச்சுட்டு முதல் மார்க் எடுக்கிறார்கள். டவுன் மக்கா ,படிப்பில் கொஞ்சம் மக்காயிட்டு வர மாதிரி தெரியுது. ஆனா இவங்க பெத்தவங்க sorry டாடி, மம்மியைக் கேட்டால்" சிட்டி,டவுனில் டைவேர்சன் அதிகம்; ஊர்ப்புரம் [நான் புதிதாக தெரிந்து கொண்ட சொல்லை பயன்படுத்தி விட்டேன்] படிப்பைத் தவிர வேறு எந்த டைவேர்சனும் இல்லை"என்றுசொல்லுவார்கள் ; சொல்லுகிறார்கள்.{ அப்பாடி ! நான் தெரிஞ்சுகிட்ட ஒரு உண்மையையும் சொல்லிட்டேன். }
ஒ.கே. இப்ப நான் , டவுனுப்புரம், ஊர்ப்புரம் ,எல்லாப்புரத்து மாணவ, மாணவிகளுக்கு
தகுந்த மாதிரி எனக்குத் தெரிந்த, அனுபவத்தில் உணர்ந்த சில விஷியங்களை சொல்லப் போறேன்:
1. டெய்லி நடத்தற பாடங்களை அன்னனைக்கே படிக்கப் பாருங்கள். கொஞ்சம் சிரம்மம்தான்.அட்லீஸ்ட் ஒரு முறையாவது படித்துப் பாருங்கள்.
2 புரிந்து படிப்பது மிகவும் முக்கியம்.
3. ஆசிரியர் பாடம் நடத்தும் போது சொல்லும் குறிப்புக்களை குறித்து வையுங்கள்.[அதையும் தவறாமல் படிக்கணுங்கள்]
4. டெஸ்ட்+பள்ளித் தேர்வு எழுதறீங்களோ, இல்லையோ கொஸ்டீன் பேப்பரை வாங்கி வையுங்கள். பின்னால் உதவும்.[அட்டெம்ட் அடிக்கும் பின்னால் இல்லை]
5. பள்ளி +முந்திய ஐந்து வருடபொதுத் தேர்வு கொஸ்டீன் பேப்பரைப் ரிவைஸ் பண்ணுவது நல்ல பலனைத் தரும்.
6 . தேர்விற்கு அட்லீஸ்ட் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு பொதுத் தேர்விற்கு என்று முழு கவனத்துடன் படிக்க வேண்டும்.
7. எண்ணை குறைவான உணவுகள் [முடிந்தவரை அசைவ உணவுகளைதவிர்ப்பது ]சாப்பிடுவது நல்லது.
8. அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
9.இளநீர்,மோர் நிறைய குடிக்கலாம்.

10.இரவு நீண்ட நேரம் படிப்பதை விட அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.
11. இரவு படுக்க போகும் முன்னும், காலையில் எழுந்தவுடன் பத்து நிமிடங்களாவது
கண்களை மூடிக் கொண்டு "'நான்தான் முதல் மார்க் எடுப்பேன்" என்று உங்களுக்குள்ளேயே சொல்லுங்கள். [ கனவு காணுங்கள் என்று ஒருவர் சொன்னது நினைவிற்கு வருதா? இதுதான் அவர் சொன்ன கனவு]
12 .காலையில் எழுந்ததும் பச்சை மரத்தைப் பார்ப்பது கண்களுக்கு மிகவும் நல்லது.
13. அதிகாலை காற்றை நன்கு சுவாசிப்பது நல்லது.
இடைவிடாமல் படிப்பதும் போர்தான். கொஞ்ச நேரம் வேறு ஏதாவுது செய்யலாம். உடம்புக்கும்,
மனசுக்கும் , கண்ணுக்கும் ஓய்வு கட்டாயம் தர வேண்டும்.

வழக்கம்போல் அம்மா, குடும்பத்தார் அவங்க சக்திக்குத் தகுந்த மாதிரி பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது, குடம் தண்ணீர் ஊற்றுவது, மொட்டை அடிப்பது [யார் தலையை?] என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
மாணவமணிகள் அவங்க பங்குக்கு ஸ்பெஷல் வேண்டுதல்களை செய்துக்குங்கள்.
மேலே சொன்னதெல்லாம் ஒ.கே. நான் இப்போது ஒன்று சொல்லப் போறேன்; அதுதான் ........................
உறுதியான, நிச்சியமான,அனுபவத்தில் உணர்ந்த ஒரு உண்மை........!
இதில்தான் உங்களின் மகத்தான வெற்றியே இருக்கிறது!
பாசானாலே போதும்,

நல்ல மார்க் வேணும் ,
ரொம்ப நல்ல மார்க் வேணும்,
மாவட்டத்தில், மாநிலத்தில் முதலாவதாக வரணும்.
இதில் ஏதோ ஒன்றுதான் மாணாக்கர்களின் ஆசையாக இருக்கும்.

எனக்குத் தெரிந்து இதற்கு ஸ்பெஷலா ஒரு சாமி அல்லது தேவதை [அவங்கவங்க விருப்பபடி எப்படிவேணா சொல்லலாம்] இருப்பதாக கேள்விப் பட்டுயிருக்கிறேன். அது ..............................................?
"லக்"[LUCK]

"அதிர்ஷ்டம்"
இந்த சாமிக்கு,தேங்காய் உடைப்பீர்களோ, தண்ணி ஊற்றுவீர்களோ, மொட்டை அடிப்பீர்களோ தெரியாது: என்ன செய்வீர்களோ; இந்த சாமியின் அருள், இருந்தால் மட்டுமே மேலே சொன்னதுஎல்லாம் நடக்கும்.

ஆனா முயற்சி திருவினை ஆக்கும் என்றும் சொல்லி இருக்காங்கள்; [ஐயோ கொஸ்டீன் பேப்பர் போலவே இதுவும் கொழப்புது!] சரி எதோ ஒன்னு; பாஸ் ஆனால் போதும்.
ஆல் தி பெஸ்ட்.















வெள்ளி, டிசம்பர் 11, 2009

கூந்தல் பராமரிப்பு

கீரைத் தைலம்.

தேவையான பொருட்கள்-

கரிசலாங்கண்ணிக் கீரை -3-4 கட்டு

அரிசி களைந்த நீர் -2- 3 டம்ளர்

கடுக்காய் -5 பொடிக்கவும்

தேங்காய் எண்ணை -1/4 கிலோ

நல்லெண்ணெய் -1/4 கிலோ

மருதாணி இலை - ஒரு கை பிடி நசுக்கி வைக்கவும்

செய்முறை-

கீரையை கழுவி, அரிசி களைந்த நீர் விட்டு

மிக்சி அல்லது கல்லுரலில் போட்டு இடித்து

இரண்டு டம்ளர் கெட்டிச் சாறு எடுக்கவும்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சாறு, எண்ணைகள்,

கடுக்காய்ப் பொடி, இடித்த மருதாணி இலை போட்டு

கலக்கி அடுப்பில் வைக்கவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைக்கவும்.

சிறு தணலில் சப்தம் அடங்கி,

அடியில் நெய் கசண்டு போல்

வரும் வரை வைத்திருக்கவும்.

பின் இறக்கி ஆறியதும்,

வெள்ளைத் துணியில் வடிகட்டவும்.

தினமும் இதை கூந்தலில் தடவி வர

கூந்தல் நன்கு வளரும்.

ஞாயிறு, ஜனவரி 18, 2009

கூந்தல் பராமரிப்பு

இளநரை ஒரு பெரிய பிரச்சனைதான். எந்த வயதிலும் வரும். அதற்கு ஒரு ஸ்பெஷல் எண்ணை இதோ;
ஒரு கைபிடி அளவு கருவேப்பிலை, ஐந்து கொட்டை நீக்கப்பட்ட பெரிய நெல்லிக்காய் ,விழுதாக அரைத்து வைக்கவும். கால் லிட்டர் நல்லெண்ணையைக் காய்ச்சி, அரைத்த விழுதுகளை அதில் போட்டால், சட, சட என ஒரு சப்தம் வரும். அச்சப்தம் அடங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். வேறொரு பாத்திரத்தில் கால் லிட்டர் தேங்காய் எண்ணையைக் காய்ச்சி ,புகை வரும் போது அடுப்பை அணைக்கவும். உடனே அதில் 25 கிராம் ஓமத்தைப் போடவும். இதை ஆற விடவும். இதனுடன் நல்லெண்ணெய் கலவையில் பாதிஅளவு, கலந்து வைக்கவும். இதை தினம் தடவி வர, இளநரை போய்விடும்.
இந்த எண்ணை தீர்ந்ததும், மறுபடியும் கால் லிட்டர் தேங்காய் எண்ணையுடன்
25 கி ஓமத்தை சேர்த்து காய்ச்சி,மீதியுள்ள நல்லெண்ணெய் கலவையுடன் கலந்து கொள்ளலாம்.
இந்த எண்ணையை ஒன்றரை மாதம் வரை வைத்துப் பயன் படுத்தலாம்.
நெல்லிக்காய் குளிர்ச்சி என பயப்படாமல் இந்த எண்ணையைப் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணை - coconut oil
நல்லெண்ணெய் -gingelly oil
ஓமம் -tymol seeds
நெல்லிக்காய் -goose berry
கருவேப்பிலை -curry leaves
மற்றொரு முறை-
100 கி மருதாணிப் பவுடர்
100 கி நெல்லிக்காய்ப் பவுடர்
20 கி பிஞ்சு கடுக்காய்ப் பவுடர்
1/4 டீ டிகாசன்
1 எலுமிச்சம் பழ சாறு
ஒரு இரவு முழுவதும் இவற்றைக் நன்கு கலந்து ஊற வைக்கவும். மறுநாள் இதை தலையில் தடவி,நன்கு காய்ந்ததும் நன்கு அலசிக் குளிக்கவும்.
வாரம் ஒரு முறை தவறாமல் போட்டுக் குளிக்கவும். கொஞ்ச நாளில் நரை முடிகள் பழுப்பு நிறமாகி, பின் மெள்ள, மெள்ள கருப்பாகி விடும்.
மற்றொரு முறை-
பிஞ்சுகடுக்காய்,நெல்லிக்காய்,கருவேப்பிலை ...மூன்றையும் சம அளவு யெடுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும். நல்லெண்ணையை சூடுபண்ணவும். எண்ணையில் இடித்ததைப் போட்டு நன்கு ஊறவிடவும். மூன்றும் மூழ்கும் அளவு எண்ணை இருக்க வேண்டும்.
தலைக்குக் குளிக்கும் போது இந்த எண்ணையை லேசாக சூடு பண்ணி, தலையில் நன்றாகத் தேய்த்து சீயக்காய் போட்டு அலசிக் குளிக்க வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது இதைப் பயன் படுத்த வேண்டும்.
மருதாணி பவுடர்- henna powder
கடுக்காய்ப் பவுடர் - gall nut powder

சீயக்காய் பவுடர்- சொபட
மற்றொரு முறை-
1/2 கி நல்லெண்ணையைக் காய்ச்சி அடுப்பை விட்டு இறக்கி வைக்கவும். அதில் நான்கு கைபிடி அளவு [50 கி] கருவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் இந்த எண்ணையை மிதமாக சூடு பண்ணி தலையில் நன்றாக தேய்த்து ஊறி சீயக்காய் போட்டு அலசவும்.
வாரம் இரு முறை குளிக்கவும்.
ரெடிமேட் பேக்-
ஒரு பிடி கருவேப்பிலையை அரைத்து, அதனுடன் 3 டீ ஸ்பூன் வெந்தையப் பவுடரைக் கலந்து தலைக்கு" பேக்" போட்டு நன்கு காய்ந்ததும், அலசவும்


வாரம் ஒரு முறை குளிக்கவும்.









புதன், ஜனவரி 07, 2009

முதல் சமையல்






ஞாபகம் வருதே; ஞாபகம் வருதே. என் முதல் சமையல் ஞாபகம் வருதே.
எனக்கு பதினாறு வயது. அம்மாவும், அப்பாவும் வெளியூர்
செல்லவேண்டிய சூழ்நிலை. நான் சமையல் செய்ய வேண்டிய சூழ்நிலையும் உருவாக்கப் பட்டது. காலத்தின் கட்டாயம். அன்றுவரை சாப்பிடத் தெரியும்; பிடிக்காத உணவு என்றால் கோவப் பார்வையுடன் எழுந்து போகத் தெரியும். தெரியாதது சமையல் செய்வது. அவ்வப்போது காதால் கேட்டு, கண்ணால் பார்த்தது மட்டுமே என் சமையல் அறிவு. என் செய்வது? களத்தில் இறங்கத் துணிந்து விட்டேன். வேறு வழி?அவர்களும் சென்றுவிட்டார்கள். என் சாமார்த்தியத்தின் மேல் நம்பிக்கை கொண்ட தங்கைகளும்,சிறு தம்பியும் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். நான் .............? அடுப்புடன் போராடிக் கொண்டு இருக்கிறேன். ஆமாம்; பால பாடம்; அடுப்பு பற்ற வைப்பது. கண் கலங்கி, முகத்தில் கரி பூசி, போராடி ஒருவழியாக முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி விட்டேன். பாத்திரத்தை அடுப்பில் வைத்த பின்தான் அடுத்த கட்டத்தின் முக்கியத்துவம் புரிந்தது. எந்த அளவு தண்ணீர் எடுப்பது?இது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியதா? சாதாரண சமையல் தானே............!கை தேர்ந்த சமையல்காரி போல் பாத்திரத்தில் நீர் ஊற்றி விட்டேன். சிறந்த சமையல் நிபுணர்கள் சொல்வதைப் போல் "கண் திட்டத்தில் தண்ணீர்" எடுத்தாகிவிட்டது. அடுத்த கட்டம் சுலபமானதுதான். அரிசியை இரண்டு, மூன்று முறை கழுவி, கல்போக அரித்து [இதுமட்டும் கொஞ்சம் சிரமம்தான்]கொதிக்கும் நீரில் போட்டு விட்டேன். இமய மலையில் பாதி ஏறி விட்ட பெரிமிதம். பெருமையாக,கொஞ்சம் அதட்டலாக "இன்னும் பத்து நிமிஷத்தில் சாதம் ரெடி ஆகிவிடும்;நான் கூப்பிட்டவுடன் சாப்பிட வரணும்". என்று சொல்லிவிட்டு மறுபடியும் களத்திற்கு போய், கரண்டியால் கிளறி விட ஆரம்பித்தேன். அந்த நொடிமுதல் என் சமையலுக்கு சனி பிடித்தது. கிளறுகிறேன் ..........கிளறுகிறேன் ..........கிளறிக்கொண்டேயே இருக்கிறேன். அதற்கு முடிவே வரவில்லை. சாப்பிட தம்பி, தங்கைகள்தான் வந்தார்கள். மறுபடியும் ஒரு அதட்டல்"கூப்பிடும் போது வாங்கள்".மறுபடியும் போராட்டம். நேரம் ஓடிகொண்டே இருக்கிறது. பிள்ளைகள் எட்டி, எட்டி பார்க்கிறார்கள். அம்மா சாதம் வடிப்பதைப் பார்த்த ஞாபகம் வருது. அதை செய்யலாம் என்றால், சாதமும், நீரும் பிரிவனா என்கிறது! ஒன்றோடு ஒன்றாய் கலந்து விட்டன.................!பிள்ளைகளுக்கு செம பசி.சாதமும் நீரும் கலந்த ஒரு கஞ்சி பதத்தில் டம்பளரில் ஊற்றிக் கொடுத்தேன். பிள்ளைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. பசி மயக்கம். வேறு வழி இல்லாமல் அதிலேயே சாம்பார், ரசம், தயிர் கலந்து சாப்பிட்டு மு..........டித்தார்கள். இன்றும் தம்பி [ஒரு அப்பவாகிவிட்டார்] அக்காவின் சமையல் கலாட்டாவைச் சொல்லிச் சிரிக்கிறார்.
நீங்கள் நான் முழுச் சமையலும் செய்தேன் என்று நினைத்தீர்களா? சாதத்தை தவிர மற்ற பதார்த்தங்களை அம்மாவே செய்து வைத்துவிட்டார்கள். நான் சாதம் மட்டுமே செய்தேன். அதற்கே இந்த பாடு பட்டு விட்டேன். எல்லாவற்றையும் நானே செய்திருந்தால் ...................................................................................................................?
இப்போது என் சமையல் நினைவுகளுக்கு ஏன் போனேன் தெரியுமா? நான் இத்தளத்தில் சமையல் செய்முறைகள் எழுதலாம் என்றிருக்கிறேன். அடடா ! ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இப்போது நான் ஓரளவிற்கு நன்றாக சமைக்கிறேன். தன்னடக்கம். ஒ.கே. ருசியான சமையல் குறிப்புகளுடன் மறுபடியும் வருகிறேன்.

சனி, டிசம்பர் 13, 2008

கவிதை

அடே, அசட்டு தசரதா!
உன் அருமை ராமனை
பதினாலு வருடம் பிரிந்ததற்கே
அவசரப்பட்டு உயிரை விட்டாயே!
நாங்கள் எல்லாம்
நவீன தசரதர்கள்!
நடுத்தர வர்க்கத்திலேயே
நாளும் நீச்சல் போட்டு,
நெஞ்சு நிறைய ஆசையுடன்
வங்கிக் கடனுடன் - எங்கள்
கண்மணிகளின் கல்வியைக்
கச்சிதமாய் முடித்து விட்டு
"அக்கடா" என நிமிர்ந்தால்
கம்ப்யூட்டர் படித்த எங்கள்
கண்மணி ராமன்கள்
கை நிறைய காசுடன்
அமெரிக்க வாழ்வுக்கு
அடிமையாகி விட்டார்கள்!
இருவருட இடைவெளியில் - ஏதோ
எட்டிப் பார்க்கும் மகனை- அவனது
அரைக்கால் டிராயரிலும்
அமெரிக்கப் பேச்சிலும் -எங்களுக்கு
அடையாளம் கூடத் தெரிவதில்லை
பதினாலு வருடப் பிரிவிற்கே
புத்திர சோகம் என்று
புலம்பித் தள்ளினாயே!
முதுமை முழுவதும் தனிமையுடன்
முகம் தெரியா வியாதிகளுடன்
முட்களின் மேல்
நாட்களை நகர்த்தும்
எங்களைக் கண்டிருந்தால்
ஒரு வேளை நீயும்
உயிரை விட்டிருக்க மாட்டாயோ ............?

சனி, டிசம்பர் 06, 2008

ஒரு உள்ளத்தின் குமறல்

ஹாலை நிறைக்கும் சோபா செட்டுகள்
ஹாயாக பார்க்க வண்ணத் தொலைக்காட்சி
நளினமாக சமைக்க மைக்ரோவேவ் அவென்
உல்லாசமாக உலா வர ஏசி கார்
கால மாற்றத்தின் சாட்சியாய் கணினி
அத்தனையும் உண்டிங்கு வீட்டில்
ஆனாலும் நிறைவில்லை மனதில்!
பத்து வயதில் பட்டாம் பூச்சி பிடித்து ,
கண்ணா மூச்சி ஆடி,
கட்டவிழ்த்த கன்றுக் குட்டியாய்,
துள்ளித் திரிந்த சந்தோசம் அப்போது:
காகம் போல் கூடி வாழ்ந்தது அக்காலத்தில்:
விருந்தோம்பலே அறியாக் குழந்தைகள் இக்காலத்தில்
எத்தனை கொட்டிக் கொடுத்தாலும்
திரும்பாது அவ்வாழ்க்கை ................
நிறைவான சந்தோசம் அப்போது
நிஜமான சந்தோசமில்லை இப்போது
பாவமாய் குழந்தைகள்!
பாரம் சுமக்கின்றனர்
அநாதரவாய் பெற்றோர்
அன்பு தேடுகின்றனர்
வருமா அந்த
வசதிகளற்ற ஆனந்த வாழ்க்கை?

ஒரு அப்பாவின் தவிப்பு

உப்பு மூட்டை தூக்கப்பா என்று என் மகன் கெஞ்சிய போதெல்லாம்
"ஊர்ப்பட்ட வேலை இருக்கப்பா" என்று சொல்லி ஓடினேன்....!
உள்ளத்தில் பொங்கிடும் அன்பை ஒரு துளியும் சிந்தாமல் ஓடினேன்.
மணிக்கொரு கூட்டம், மணிக்கணக்கில் பேச்சு, பங்குச்சந்தை நிலவரம்,
விற்பனை உயர்வு, இத்தனையும் எதற்கு? பொருள் தேட எனக்கு...!
இன்று என் மகன் ............................................................................................?
வளர்ந்து சிறகுகள் முளைத்துப் பறந்து விட்டான்.
ஒன்றை மட்டும் உணர்கிறேன்: மனது கனக்கிறது.
இன்று அந்த சின்ன மகனை ஒரு முறை உப்புமூட்டை தூக்க
இந்த உலகத்தையே விலை பேசத் தயாராக இருக்கிறேன் ...................!
ஆனால் .........................................................?